இது, தேசியக்கவி பாரதியாரின் கருத்தாகும். இக்கருத்துவழிப் "பாஞ்சாலி சபதம்" என்ற குறுங்காப்பியத்தைப் படைத்தளித்தார். பாரதியார் தம் காலத்துப்புலவர்கள் கையாண்ட கவிதை நடையை வெறுத்தார். கவிதையாகட்டும், காப்பியமாகட்டும்; ஜன சமுதாயத்தில் சிலராகவுள்ள பண்டிதர்களுக்காக மட்டுமல்லாமல், பலராகவுள்ள மக்களுக்காகவும் அவை பயன்படவேண்டுமென்பது பாரதியாரின் கொள்கை- மதம். ஆம்; தம் கவிதைத் திறத்தால் தமிழர் சமுதாயம் முழுவதையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபடுத்த முனைந்த பாரதியார், பண்டிதர் நடையைப் பயன்படுத்த முடியாது தானே! அதனால், பழம் புலவர்கள் கையாண்ட "புரியாத நடை" மீது போர் தொடுத்தார். நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று; ருசி குறைந்தது. கரடு முரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று... ரஸம் குறைந்தது. சக்கை அதிகப்பட்டது. கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை. "மேலும் நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்து பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற,பாஷை மாறிக் கொண்டு போகின்றது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்றுதீர்மானஞ்செய்து கொண்டார்கள்."1 புதிய மதம்! தமிழகம் தன்னாட்சி செலுத்திய காலத்திலே, நம் தாய் மொழியானது தமிழ் மன்னர்கள் அரவணைப்பிலே வளர்ந்தது; பின்னர், பிறமொழியினர் தமிழகத்தின் மீது அரசியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்திய காலத்திலே, நம் அன்னை மொழி மடங்களிலே 1. பாரதி கட்டுரை நூல்கள்-பக் 75-76. |