அடைக்கலம் புகுந்தது. நாட்டில் விடுதலைப் போர் தோன்றிய பின்னர், மடங்களிலிருந்து விடுதலைபெற்று மக்கள் மடியிலே தவழ்ந்து வளர்ந்தது. "தேசபக்தி" என்னும் புதிய மதம் தோன்றியில்லையேல், அந்த மதத்தின் மகாகவியாக பாரதியார் வந்தில்லையேல், தமிழ் மொழிக்குப் புது வாழ்வேது? இதனை, பாரதியாரே கூறுகின்றார், மீண்டும் ஒரு முறை கேட்போம்: 'நாட்டில் ஓர் புதிய ஆதர்சம்-ஓர் கிளர்ச்சி-ஓர் தருமம்-ஓர் மார்க்கம்- தோன்றுமேயானால், மேன்மக்களின் நெஞ்சமனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. "சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய 'தேச பக்தி' என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகியயானும் தேவியினது கிருபையால் அப்புத்திய சுடரினிடத்து அன்பு பூண்டேன்"1 இதிலே, நாட்டில் தோன்றிய தேச விடுதலைக் கிளர்ச்சியே- அதாவது, "தேச பக்தி" யாகிய புதியமத எழுச்சியே "சர்வ சுபங்களுக்கும் மூலாதாரம்" என்று பாரதியார் குறிப்பிட்டிருப்பது கருத்திற் பதியவைக்கத் தக்கதாகும். தமிழ் நாட்டிலே, கட்டபொம்மன் காலந் தொடங்கி, காந்தியடிகள் காலம் வரை-சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம்- நடந்த விடுதலைக்கிளர்ச்சி தோன்றாதிருந்தால், தமிழ் மொழி மறுமலர்ச்சியடைந்திருக்க வாய்ப்பில்லை - குறிப்பாக, கவிதை இலக்கியம் என்பது, வெறும் தெய்வபக்தி பற்றியதாகவே இருந்திருக்கும். கடைச்சங்க காலத்திற்குப்பின் தமிழகத்தில் புகுந்த புதுச் சமயங்களான சமணமும் பௌத்தமும் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், திருத்தக்க தேவர் போன்ற மகாகவிகளைத் தந்தன. பின்னர், இந்தியாவிற்குப் புறச் சமயங்களான இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் உமறுப்புலவர், வீரமா முனிவர் ஆகிய பெருங்கவிஞர்களை வழங்கின. 1. “ஸ்வதேச கீதங்கள்” 2ஆம் பாகத்தின் முன்னுரையில் |