பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 159

     அப்படியே,  இருபதாம்  நூற்றாண்டின் துவக்கத்திலே, அங்கு இங்கு
எனாதபடி  பாரதம் எங்கணும் பரந்து, அனைத்து மதத்தினரையும் தன்பால்
ஈர்த்துக்கொண்ட  "தேசபக்தி" என்னும்  புதிய மதம் மகாகவி சுப்பிரமணிய
பாரதியாரைத்   தந்தது.   அவரை,  முதல்வராக்கி   ஒரு  புதிய  கவிஞர்
பரம்பரையே தோன்றியது.
 

     விடுதலைப்    போராட்டத்தின்  போது   இந்தியாவிலுள்ள  பிரதேச
மொழிகளிலே ஒவ்வொரு மொழியிலும் செய்யுள்  இலக்கியங்கள் அதனதன்
வளத்திற்கேற்பத்   தோன்றின   என்றாலும்,  ஒரு "தேசிய மகாகவி" யைப்
பெற்றெடுத்த  பெருமை  நம் தமிழ்  மொழிக்கே  உண்டு. வேறு மொழிக்கு 
இல்லை.  இந்தியாவின்  தேசிய கீதமாக்கப் பட்டுள்ள 'ஜனகணமன' பாடிய
கவிஞர்  தாகூரும்  தேசிய  மகாகவியாகக்  கருதப்படவில்லை. விடுதலைப்
போருக்கு    அவருடைய    தார்மிக    ஆதரவு  இருந்தது  என்றாலும்,
பாரதியாரைபோன்று    விடுதலைப்     பாசறைக்    கவிஞராக    தாகூர்
விளங்கவில்லையல்லவா! ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக் கொடுமைகளை
தாகூர்   அனுபவிக்கவில்லை யல்லவா!   இந்தச்   சிறப்புகளை யெல்லாம்
பெற்றிருந்தும்  தேசம்  முழுவதும்  புகழ்  மணக்கும்  தேசியக் கவியாகும்
பேற்றினை    இன்னமும்    பாரதியார்   பெறவில்லை.   இது,   இந்திய
தேசியத்திலுள்ள   குறைபாடு.  காலப்போக்கில்  இந்தக்  குறைகள்  நீங்கி
பிறமொழி மாநிலங்களிலும் பாரதியாரின்புகழ் மணக்குமென்று
நம்புவோமாக!
 

     பங்கிம்சந்திர சட்டர்ஜியின் 'வந்தே மாதரம்', தாகூரின் 'ஜன கண மன'
ஆகிய    வங்கமொழிப்   பாடல்களும்;   காந்தியடிகளின்   உள்ளத்தைக்
கொள்ளை  கொண்ட  “வைஷ்ணவ ஜனதோ"  என்ற குஜராத்திப் பாடலும்;
"ஜண்டா  ஊஞ்சா  ரஹே  ஹமாரா"  என்ற இந்துஸ்தானிப் பாடலும்; தேச
பக்தியுடைய   இந்தியர்களின்   நாவுகளிலே  நடம்புரிகின்றன.  அதுபோல,
பாரதியாரின்  தேசியப்  பாடல்களை  மொழி  பெயர்க்கும் தேசியப் பண்பு
படைத்த  கவிஞர்கள்  வடபுலத்தில்   அன்றும்  இருந்ததில்லை,  இன்றும்
இருக்கவில்லை.    தாகூரின்    கவிதையை   மட்டுமின்றி,   கட்டுரைகள்
பலவற்றையும்   தமிழில்  மொழிபெயர்த்துத்  தமிழினத்தாருக்கு  வழங்கும்
விரிந்த  மனம் பாரதியாருக்கு  இருந்தது. பாரதியாருக்கு முன்பே தோன்றி,
அந்த மகாகவி மறைந்த  பின்பும் வாழும் பேறுபெற்ற ரவீந்திரநாத் தாகூர்
பாரதியாரைப் பற்றி எதுவும் கூறியதாகச் செய்தி இல்லை.