பாரதியின் பரந்த நோக்கு கவி தாகூர், இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக உலக நாடுகளில் பெரிதும் வரவேற்கப்பட்டார். ஜப்பானில் அவருக்கு ராஜோபசாரம் நடைபெற்றது. ஆம்; அவருடைய வங்கமொழிக் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதன் காரணமாகத்தான்! தமது தாயகத்தில் தோன்றிய- தம் தாய் மொழியின் சகோதரமொழி தோற்றுவித்த - கவிஞர் தாகூருக்கு உலக நாடுகளிலே சிறப்பு நடைபெறுவது கேட்டு மகாகவி பாரதி பூரிப்படைந்தார். அந்தப் பூரிப்பிலே தன்சகோதரக் கவிஞருக்கு புகழ்மாலை சூட்டினார். இதோ, அந்த “மாலை."! "கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் போலே அடையவேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டலம் முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும்மொழி பெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி. "தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தியொரு கீர்த்தியாகுமோ? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்திரநாதர் இந்தியாவை பூலோக குருவென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார்; அவர் திருவடி மலர்கள் வாழ்க!"1 கவி ரவீந்திரர், தாம் வாழ்ந்த காலத்திலேயே உலகநாடுகளிலே புகழ்பெற முடிந்ததென்றால், அதற்குக் காரணம் என்ன? எந்த வங்கமொழியில் அவர் கவிதைகள் புனைந்தாரோ, அந்த மொழி பேசும் வங்காளிகள் தாய்மொழிப் பற்றுடையவர்கள். தங்கள் மொழி வழங்கும் பிரதேசத்தைச் சொர்க்க பூமியாகக் கருதக் கூடியவர்கள். அதனால், வங்க மொழிக்கவிஞரான தாகூரை வான்புகழ் பெருமளவுக்கு உயர்த்தி விட்டனர். தமிழகத்துக்குத் தேசியப் பாசறையிலே, 'தாய்மொழிப் பற்று' என்றாலே, "அது,குறுகிய புத்தி" என்று கூறுவோர் அன்றும் முன்னணியிலிருந்தார்கள். அவர்களுடைய வாரிசுகளாகச் சிலர் இன்றும் முன்னணியிலிருக்கிறார்கள். 1. 'பாரதி தமிழ்'; பக் 514 |