இந்த நிலையில், தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தேசிய மகாகவிக்கு உலகப்புகழ் கிடைப்பது எங்ஙனம்? விடுதலைப் பாசறையில் தோன்றிய கவிஞர்களிலே காலத்தால் தேசிய மகாகவி பாரதியாருக்கு அடுத்தபடியாக நமது நினைவுக்கு உரியவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையாராவார். அம்மையார் பாடிய 'திலகர் புராணம்', 'காந்தி புராணம்' ஆகிய செய்யுள் இலக்கியங்கள், 'புராணம்' எனப்பெயர் பெற்றிருப்பினும், விடுதலைப் போர்க்களத்தின் - இருபெரும் சகாப்தத்தின் - தளபதிகள் பற்றிய புரட்சி இலக்கியங்களாகும். காந்தி புராணம் பண்டிதை அசலாம்பிகை அம்மையார், நாட்டின் விடுதலைக்கும் தமிழுக்கும் ஆற்றியுள்ள தொண்டுகள் போற்றத் தக்கவையாகும். இவரது வரலாற்றை விடுதலைப் பாசறையினர் மறந்தனர்; காலதேவன் மறைத்தேவிட்டான். யார் யாரைப் பற்றி யெல்லாமோ தகவல் தரும் 'தமிழ் கலைக்களஞ்சியம் 'கூட, இவ்வம்மையாரைப் பற்றி ஒரு குறிப்புகூட தந்திலது. நல்லவேளையாக, பெண்குலத்தைப் பெருமைப் படுத்துவதற்கென்றே பிறந்து வளர்ந்து வாழ்ந்த தமிழ்ப் பெரியார் திரு.வி.க., தமது வாழ்க்கைக் குறிப்பில் இவரைப்பற்றிப் பல செய்திகளைத் தந்துள்ளார். அவற்றில் சில வருமாறு: "பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இக்கால ஒளவையார். பழம்பெரும் புலவருள் வைத்துக் கணிக்கத் தக்கவர், பண்டிதையார்க்கு நாவன்மையும், எழுத்தினிமையும், பாட்டுத்திறனும் ஒருங்கே அமைந்துள்ளன"1 "பண்டிதை அசலாம்பிகை அம்மையார் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் பல திறத்தன. அவைகளுள் ஒன்று காந்தி புராணம் பாடியது. 'பணி கொழிக்கும் கையும், பா கொழிக்கும் நாவும் உடைய தமிழ் அன்னையார் வாழ்க; நீடு வாழ்க!"1 1. 'திரு.வி.க.வாழ்க்கைப் குறிப்புகள்', பக்.191 2. 'திரு.வி.க.வாழ்க்கைப் குறிப்புகள்', பக்.194 |