கும் அழகும் மஹாத்மாவின் உயர் வாழ்வில் நடந்தவற்றை விடாது
உரைக்கப்பட்டிருக்கும் நுட்பமும் ஆராயுமிடத்தில் இந்நூல் தமிழ் நாட்டிற்கு
ஒரு நன்கொடை என்றே எண்ணுகின்றோம். தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய
முதல் நூல்கள் இன்றியமையாதன. இதைப் பாடியருளிய அம்மையாருக்கு
நாம் வந்தனம் செலுத்துகின்றோம். "தமிழை வளர்க்கும் இத்தகைய புத்துணர்ச்சிபெற்ற சிறந்த
முயற்சிகளைத் தமிழர் தக்கபடி போற்றுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்"1
கவிதையிலே மார்க்சிசம்
தமிழிலே கவிதை இலக்கியம் படைத்த விடுதலை வீரர்களுள் தமிழ்ப்
பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவராவார். திரு.வி.க.,
புலவர்களுக்குகெல்லாம் புலவராக விளங்கியபெரும் புலவராவார். சென்னை
வெஸ்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலத்திலேயே
அவருடைய உள்ளம் தேசிய எழுச்சியோடு உறவு கொண்டது. "சுதந்திரம்
எனது பிறப்புரிமை" என்று திலகர் பெருமான் சொன்ன மந்திரச் சொல்
திரு.வி.க.வின் சிந்தையைக் கவர்ந்தது. பிறப்பிலேயே 'சாது'வாக விளங்கிய
அவர் சாந்தமூர்த்தி காந்தி மகானின் தலைமையை ஏற்றார். பேராசிரியர்
தொழிலைத் துறந்து விடுதலைப் பாசறையில் புகுந்தார்.அந்நாளிலே, தமிழ்ப்
பேராசிரியர் எவரும் தேசிய அரசியலிலே கலந்திருக்கவில்லை.
கலப்பதற்குத் தனிப்பெருந் துணிவு தேவைப்பட்டது. அந்தத் துணிவு 'சாது'
கலியாணசுந்தரனாருக்கும் இருந்தது. அதனால், தமிழ்ப் புலவர்களின் ஏகப்
பிரதிநிதியாக அரசியலில் பிரவேசித்து, அந்தப் பாசறையிலே முன்னணியில்
இடம் பெற்றார்.
கவிதைத் தமிழ் வளர்த்த தேசியவாதிகளிலே திரு.வி.க.வுக்குத்
தனியிடம் உண்டு. இத்துறையிலே அவர் பெரும்புகழ் பெற
வில்லை என்றாலும், அவர் படைத்த கவிதை இலக்கியங்கள், தமிழ்
இலக்கியக் களஞ்சியத்திலே சேர்த்திடத்தக்க செல்வங்களாகும்.
அவருடைய கவிதை நூல்களை, அரசியல் - சமயம் - சமூகம் என
மூன்றாகப் பிரிக்கலாம். "உரிமை வேட்கை அல்லது நாட்டுப்
பாடல்", "மார்க்சிஸமும் காந்தியமும்" ஆகிய இரண்டும் அரசியல்
1. ‘பால பாரதி’ ; டிசம்பர் 1924