உற்றதுணை காந்திவழி பழசாமென்றால்
உய்வதற்கு வேறுகதி உண்டோ நெஞ்சே! தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் காந்தியடிகள் தீவிரங்காட்டியபோது,
அதற்கு ஆதரவாக நாமக்கல் கவிஞர் பல பாடல்களைப் பாடினார்.
அவற்றில், "நானோ சண்டாளன்?" என்ற பாடல் வைதிகக் கோட்டைமீது
வீசப்பட்ட வெடிகுண்டுபோலப் பயன்பட்டது.
எளிய நடை; பாமரரும் பாடி மகிழத்தக்க பாணி; பாடுவோரைச்
'சந்தி'யில் நிறுத்திச் சங்கடப்படுத்தாத புலமை; சரித்திர உண்மைகளை
மறைக்கும் திரையாக அமையாத வருணனை இவையனைத்தும் கூடியது
நாமக்கல் கவிஞரின் கவித்துவம்! இவர், பண்டிதர் - பாமரர் ஆகிய இரு
சாராரிடையேயும் விடுதலை ஆவேசத்தை வளர்த்தார்.
நாமக்கல் கவிஞரின் 'ஆடு ராட்டே' பாடல் அந்நாளில்
பட்டிதொட்டிகளிலெல்லாம் பாமரர்களாலும், பாடப்பெற்றது.
தூயதேசியவாதியான கவிஞர், தமிழன்' என்ற இனவுணர்ச்சியை
வெறுக்காமல், அதனை அனைவரும் விரும்பும் வகையில் பாடல்களை
இயற்றி வழங்கினார்.
தமிழன் என்றொரு இனமுண்டு;
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனுடை வழியாகும்.
தமிழனென்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!
என்னும் வரிகள், தமிழரிடையே இனவுணர்ச்சியைப் பெருக்கி,
உரிமைக்குப் போராடும் இதய எழுச்சியையும் ஏற்படுத்துவனவாகும்.
'இந்தியா இந்தியருக்கே' என்ற தேசியக் கோஷத்திற்கும் 'தமிழ் நாடு
தமிழருக்கே' என்ற இனவுரிமை முழக்கத்திற்கும் இடையே ஒருமைப்பாடு
காண்பவராகி,
இந்திய நாடிது என்னுடை நாடே
என்று தினந்தினம் நீயதைப் பாடு
என்று பாடியவர், அதே பாட்டில்,
முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு
முற்றிலும் சொந்தம் எனக்கெனப் பாடு