பக்கம் எண் :

168விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

என்ற   வரிகளிலே,   'தமிழ்நாடு தமிழருக்கே'   என்றும் முழங்குகின்றார்.

பிற மாநிலங்களிலே...

     "வள்ளத்தோல்"  என்றழைக்கப்படும் நாராயண மேனன் (1878 - 1958)
என்பார்,  கேரளத்தில்  மலபார் மாவட்டத்தில் மங்கலம் என்னும் சிற்றூரில்
பிறந்தவர்.  இவர்,   தலைசிறந்த    காந்தியவாதி.  கேரளத்தின்  தேசியக்
கவிஞராகப்  போற்றப்படும்  இவர்,  தாம்  வாழ்ந்த காலத்திலேயே கேரள
மக்களாலும், சுதந்திரத்திற்குப்பின் அமைந்த மாநில - மத்திய அரசுகளாலும்
நன்கு போற்றப் பெற்றார்.

     'சித்திர யோகம்'  என்ற  மகா  காவியத்தை  மலையாள  மொழியில்
படைத்தார்.  வால்மீகி  இராமாயணத்தை  மலையாள  மொழியில்  கவிதை
நடையில்  மொழி  பெயர்த்தார். இவருடைய சிறிய காவியங்களனைத்தும் 9
தொகுதிகளாக  வெளியிடப் பட்டுள்ளன.  இவர்,  'கேரள  கலா மண்டலம்'
அமைத்து, அதன்  மூலம் கேரளத்தின் சிறப்புமிக்க கலையான 'கதகளி'யை
உலகிலுள்ள முக்கிய நாடுகளிலெல்லாம் பரவச் செய்தார். மலையாள மொழி
வளர்ச்சிக்குப்  பாடுபட்ட  தேசியவாதிகளிலே  வள்ளத்தோல்   முதன்மை
பெற்று விளங்குகின்றார்,

     வடபுலத்துப் பெருந்தலைவர்களிலேயும் சிலர் தத்தம் தாய் மொழியில்
கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றிருந்தனர் என அறிகிறோம்.

     வங்கந்தந்த  பெருந்தலைவரான   அரவிந்த் கோஷ்,    மிகச்சிறந்த
கவிஞராக விளங்கினார். அவரை, கவி தாகூர், "பாரத வாணியின் யாழிசை"
என்று    வருணித்தார். ஆங்கிலத்திலும்  வங்க  மொழியிலும்  அரவிந்தர்
படைத்துள்ள  கவிதை  இலக்கியங்கள் பலவாகும். அவற்றுள், "பாஜி பிரபு"
என்பது  வரலாற்றுக்  காப்பியமாகும்.  "மிர்தில்லா  கீதங்கள்", "அஹானா"
"ஊர்வசி",  "ரிஷி" ஆகிய கவிதை நூற்கள் அவரை மகாகவியின் நிலைக்கு
உயர்த்துவனவாகும்.   "துர்க்கா  துதி"   என்ற   நூலிலுள்ள   கவிதைகள்,
விடுதலைப்      பாசறையில்     சேர்ந்த     வீர     இளைஞர்களுக்கு 
ஆவேசமூட்டுவனவாக இருந்தன. அரவிந்தர்,  சம்ஸ்கிருதத்திலுள்ள கவிதை
இலக்கியங்களிலே   சிலவற்றை     அழகிய    ஆங்கிலத்தில்    மொழி
பெயர்த்துள்ளார்.