வங்கந்தந்த மற்றொரு பெருந்தலைவராக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்,
வங்க மொழியிலே மிகச் சிறந்த கவிஞராக விளங்கினார். இவர்,
'சி.ஆர்.தாஸ்' என்று அழைக்கப்பட்டார்.
தாசர், தாம் இயற்றிய சுவைமிக்க கவிதைகளை இரண்டு தொகுதிகளாக
வெளியிட்டுள்ளார். அவற்றின் பெயர், "மலஞ்சா", "மாலா" என்பனவாம்.
இவர், 'நமக்குத் தொழில் கவிதை' என்று தம்மைக் கூறிக்கொள்ளும்
நிலையில் இருந்தவரல்லர். ஆயினும், வங்கந்தந்த தலைசிறந்த
கவிஞர்களிலே ஒருவராகக் கருதப்பட்டார். தாஸ் மரணமடைந்த செய்தி
கேட்ட காந்தியடிகள், "தாசர் வாழ்ந்திருந்து எனக்கு சரமகவிபாடுவார்
என்றல்லவோ எண்ணியிருந்தேன். அந்த பாக்கியத்தை நான் இழந்து
விட்டேனே" என்று வாய்விட்டுக் கூறி வருந்தினாரென்றால், தாசரின்
கவித்திறனுக்கு வேறு சான்றும் வேண்டுமோ!
ஆந்திர நாட்டில் புகழ்மிக்க தேசியக் கவிஞர்கள் தோன்றவில்லை.
ஆயினும், விடுதலைப் போருக்கு வேகமூட்டும் கவிதைகள் பல தெலுங்கு
மொழியில் இயற்றப்பட்டன. அவை, தமிழகத்துச் சிறைகளிலேயும் முழங்கின.
இசைத் தமிழை வளர்க்கப் பணிபுரிந்த தேசியவாதிகள் அரசினரின்
அடக்கு முறைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. 'வீடுபேறு' கோரித்
தெய்வபக்திப் பாடல்களைப் பாடுவோரைக் கண்டு அரசு அஞ்சவில்லை.
ஆனால், விடுதலை வாழ்வு கோரும் தேசபக்திப் பாடலைப் பாடுவோரைக்
கண்டு அஞ்சி நடுங்கியது. தமிழை, மத எல்லைக்குள்ளே சிறைப்படுத்தி
வைக்க தேசியவாதிகள் விரும்பியிருந்தால், ஆங்கிலத்தைக் கொண்டே
அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் பாடுவதற்கு அவர்கள் இசைந்திருந்தால்,
ஆட்சி அனுமதித்திருக்கும். மாறாக, தாய் மொழியில் பாடியே தாய்நாட்டின்
விடுதலைக்குப் போராடிய காரணத்தால், இசைத் தமிழுக்கும் எதிர்ப்புக்
காட்டியது ஏகாதிபத்தியம்.
1928 ஆகஸ்டு 7ல், அப்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த
பர்மாவிலே, அந்த மாநிலத்தின் கவர்னர் பாரதியார் பாடல்களுக்குத்
தடைவிதித்தார். பர்மாவின் எல்லைக்குள்ளே பாரதி பாடல்கள்
நுழையக்கூடாதென்பது தடையுத்தரவு. அதே ஆண்டு செப்டம்பர்
11ல் சென்னை நகரிலேயும், பிரதம மாகாண மாஜிஸ்