பாடம் செய்து வைத்திருக்கிறார்களே, அவர்களை எல்லாம் அரசு
என்ன செய்யப் போகிறது?" நாவலர் சத்தியமூர்த்தி ஐயர், சட்டமன்றத்திலே கண்டனக் குரல்
எழுப்பியதோடு திருப்தி அடைந்துவிடவில்லை. அரசினரால்
ஆட்சேபிக்கப்பட்ட பாரதி நூல்களிலிருந்து சில பாடல்களையும்
சட்டமன்றத்திலேயே பாடிக் காட்டி, தம் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு
அரசினருக்கு அறைகூவல் விடுத்தார்.
ஐயர் பாடிய பாடல்களிலே, "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற
தமிழ்நாட்டுப் பெருமையை வருணிக்கும் பாடலும் ஒன்றாகும். மற்றும் தமிழ்
மொழியின் பெருமையை வருணிக்கும் "யாமறிந்த மொழிகளிலே" எனத்
தொடங்கும் பாடலையும் ஐயர் பாடிக் காட்டினார்.
மதுரை எல்.கே.துளசிராம் என்ற உறுப்பினர், "செந்தமிழ் நாடெனும்
போதினிலே" "விடுதலை, விடுதலை, விடுதலை" என்ற இரண்டு
பாடல்களையும் இசையோடு பாடி, ஏகாதிபத்தியத்தின் கோட்டையான
சட்டமன்றத்திலேயே போர்க்குரல் எழுப்பினார்.
இப்படி, அரசினர் விரும்பாத தமிழ்த் தேசியப் பாடல்களைப்
பாடிப்பாடி அடக்குமுறைக்கு ஆளான தேசபக்தர்கள்
ஆயிரக்கணக்கானவர்களாவர்.
தெய்வ பக்தரான நாவுக்கரசரே, "அஞ்சுவது யாதொன்றுமில்லை. இனி,
அஞ்ச வருவதுமில்லை" என்று தமிழ் முழக்கம் செய்தாரென்றால்,
தேசபக்தர்கள் மட்டும் அன்னிய அரசுக்கு அஞ்சவரோ? அஞ்சினாரல்லர்.
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பதனை சர்வ வல்லமை பொருந்திய
சாம்ராஜ்யத்திடமே கூறினர்.
யோகி சுத்தானந்த பாரதியார், பழம்பெரும் தேசியவாதியாவார். இவர்,
நூற்றுக்கணக்கான பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றிலே,
தெய்வப்பற்று - தேசப்பற்று - தாய்மொழிப்பற்று ஆகிய பற்றுக்கள்
அனைத்தையும் மக்களுக்குப் போதித்திருக்கிறார். பதினைந்தாயிரம்
கவிதைகளாலான "பாரத சக்தி மகா காவியம்” என்ற காப்பியமொன்றையும்
இயற்றியுள்ளார்.இசையரங்கில் பாடத்தக்க எண்ணற்ற இசைப்பாடல்களையும்
புனைந்துள்ளார்.
சங்கு சுப்பிரமணியம், சிறை சென்ற தேசபக்தர். இவர்
காந்தியடிகளின் சிந்தையைக் கவர்ந்த "வைஷ்ணவ ஜனதோ"