பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 175

களுக்கு இரும்புக்   காதாக   இருப்பதால்,  திரும்பத் திரும்பத்  திரும்பத்
திரும்ப ஏழெட்டுப்   பாட்டுக்களை   வருஷக்   கணக்காகக்    கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.     தோற்காது    உள்ள  தேசங்களிலே   இந்தத்
துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.”

     "புதிய  புதிய  கீர்த்தனங்களை  வெளியே   கொண்டுவர வேண்டும்.
இப்போது   ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே
புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும். நவரஸங்களின்
தன்மைகளையும்,  இன்னின்ன  ரஸங்கள்  உண்டாகுமென்பதையும் கற்றுத்
தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

     "முத்துசாமி தீக்ஷிதர்,  தியாகய்யர்,  பட்டணம் சுப்பிரமணிய  அய்யர்,
இந்த மூன்று பெயருடைய கீர்த்தனங்களைத்தான் வழக்கத்தில்  அதிகமாய்ப்
பாடுகிறார்கள். இவற்றுள்ளே, தீக்ஷிதரின் கீர்த்தனைகள்  பச்சை சம்ஸ்கிருத
பாஷையிலே  எழுதப்பட்டவை.  இவை  கங்கா  நதியைப் போலே  கம்பீர 
நடையும்  பெருந்தன்மையும்  உடையன.  வேறு பல நல்ல லக்ஷணங்களும்
இருந்தபோதிலும்,  சம்ஸ்கிருத  பாஷையில்  எழுதப்பட்டிருப்பதால் இவை
நமது    நாட்டுப்    பொதுஜனங்கள்    ரஸானுபவத்துடன்  பாடுவதற்குப்
பயன்படமாட்டா.

     "தமிழ்ச்   சபைகளிலே   எப்போதும்   அர்த்தம்   தெரியாத  பிற
பாஷைகளில்   பழம்   பாட்டுகளை   மீட்டும்    மீட்டும்   சொல்லுதல்
நியாயமில்லை.   அதனால்   நமது   ஜாதி   சங்கீத  ஞானத்தை இழந்து
போகும்படி நேரிடும்."1

     பாரதியாரின்   இந்தக்   கருத்தோவியம்   மிகத்    தெளிவாகவும்
அழகாகவும்     அமைந்திருக்கின்றது.   சம்ஸ்கிருதத்திலே    பற்றுதலும்
பயிற்சியுமுடையவராக    இருந்தும்,   தமிழகத்து  இசையரங்கிலே அயல்
மொழிகள்  ஆதிக்கம்   செலுத்துவதனைப் பாரதியார்  வெறுத்திருக்கிறார்.
தமிழிசைப்  பாடல்களே  தமிழகத்தில்  முதலிடம் பெற வேண்டுமென்றும்
கூறியிருக்கிறார்.  இன்னும்,  சாகித்தியத்தைவிட சங்கீதமே  முக்கியத்துவம்
பெறுவதையும்  அவர்  கண்டித்திருக்கிறார்.  "கலை கலைக்காவே"  என்ற
கோஷம் மக்கள் கவிபாரதிக்கு உடன் பாடன்று. "கலை   மக்களுக்காகவும்"
என்பது அவர் கொள்கை.


1. பாரதி நூல்கள் - கட்டுரை; 'சங்கீத விஷயம்' என்னும் கட்டுரையில்.