பக்கம் எண் :

180விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

      'ஸ்வராஜ்ய  இயக்கத்திலே கலையின் மறுமலர்ச்சியும் ஒரு பகுதிதான்.
எனவே காங்கிரஸ் இதிலும் சிரத்தை கொண்டிருக்கிறது. ஆதலால் தமிழ்நாடு
காங்கிரஸ்  கமிட்டி  இந்த  சங்கீத  விழாவிற்கு  ஏற்பாடு  செய்து  தேசிய
வாழ்வின் சகல துறைகளிலும் புத்துயிர் பிறக்கும்படிச் செய்வதில் தனக்குள்ள
ஊக்கத்தை நிரூபித்திருக்கிறது. 

      "கலைகளால்  முக்கியமாகச்  சங்கீதத்தால் சுதந்திரப் போராட்டாமே
சுலபமானதாயும், இனிமை  தோய்ந்ததாயும்  இருக்கும்படிச் செய்து கொள்ள
முடியும்.   ஆவேசமூட்டக்  கூடிய  தேசீய  கீதங்கள்  காரணமாக   இதர
நாடுகளில்  மகத்தான  தியாகங்களை  நாட்டுக்காகச்   செய்திருக்கிறார்கள்.
அநேக   நாடுகளில்   நடந்த   சுதந்திரப்   போராட்டச்   சரிதைகளைப்
படித்தவர்களுக்கு  இவ்விஷயம்  தெரியும். நமது சொந்த நாட்டிலே பங்கிம்
சந்திர  சாட்டர்ஜியின் “வந்தே மாதர”  கீதமும் தமிழ் நாட்டிலே கவியரசர்
சுப்பிரமணிய  பாரதியார்  இயற்றிய  நெஞ்சை அள்ளும் தேசிய கீதங்களும்
தேசாபிமானிகளுக்கெல்லாம் உற்சாகம் தரத்தக்கவையாக விளங்குகின்றன.”

     "சங்கீதத்தைச்  சாதனமாகக் கொண்டே விடுதலையை நாடி முன்னேற
வேண்டுமென்று சொல்வேன்.”

     "இந்த  உண்மையை  அங்கீகரிப்பதற்கு  அறிகுறியாகவே  தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி இவ்விழாவை நடத்துகிறது."1

     தமிழிசையைக் கொண்டு தேசியம் வளர்ந்தது; தேசியத்தைக் கொண்டு
தமிழிசை  வளர்ந்தது.  ஆம்;   தமிழிசையும்  தேசியமும் ஒன்றையொன்று
வளர்த்தன என்பதனை மீண்டுமொருமுறை நினைவில் கொள்வோமாக!

     இந்த  உண்மையை   சுதந்திர  பாரதத்தின்  முதல் நிதியமைச்சரான
டாக்டர் ரா.க.சண்முகனார் உரையைக் கொண்டும் உறுதிப்படுத்துவோம்:

     "முப்பது   வருஷ   காலத்தில்  சுதந்திர  உணர்ச்சி  மக்களிடையே
ஏற்பட்டது     ஆங்கிலப்    பிரசாரத்தினாலல்ல.     தமிழ்  மக்களுக்கு
அவ்வேட்கையை    உண்டாக்கியது  சுப்பிரமணிய   பாரதி,  ராமலிங்கம்
பாட்டுகளே."

     "இங்ஙனம் பெற்ற சுதந்திரத்தை மொழியின் மூலமாகத்தான் காப்பாற்ற
முடியும்."


1. 'சத்தியமூர்த்தி பேசுகிறார்': பக்.203-204