தமிழ் உரைநடையிலே மறுமலர்ச்சி
தமிழ் உரைநடையிலே முதன்முதலாக மறுமலர்ச்சி கண்டவர்கள்
கிறித்துவமிஷனரிகளும் விடுதலைப் பாசறையினரான தேசியவாதிகளுமேயாவர்.
முன்னவர், ஐரோப்பியர்கள்; பின்னவர், நம்மவர்கள். இவர்களில், தமிழ்
உரைநடையில் மறுமலர்ச்சி காணும் முதல் முயற்சியை மேற்கொண்டபெருமை
கிறித்துவப் பாதிரிகளையே சாரும். தேசிய எழுச்சி கொஞ்சம் காலம் தாழ்ந்தே
தோன்றியதால், தமிழ் உரைநடையிலே மறுமலர்ச்சி காணும் பற்றினைப்
பெறுவதிலே நம்மவர்கள் பின்தங்கிவிட்டனர்.
பாதிரிமார்களின் பணி!
இராமலிங்க சுவாமிகள், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், மாயூரம்
வேதநாயகனார் ஆகிய சான்றோர்கள் தமிழில் தனி உரை நடை நூல்களை
இயற்றினர். இன்றைய உரைநடைக்கு அம்மூவருமே வழிகாட்டிகள்
என்கின்றனர் மொழி வரலாற்று ஆசிரியர்கள். ஆயினும், அவர்கள்
இத்துறையில் தனித்தனி நபர்களாக நின்றே பணியாற்றினர்.
கிறித்துவப் பாதிரிமார்கள் தாங்கள் மேற்கொண்ட சமயப் பிரச்சாரப்
பணியின் பொருட்டு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சாதாரண
மக்களோடு தொடர்புகொண்டு, அவர்களும் புரிந்துகொள்ளத் தக்க எளிய
நடையிலே சமயப் பிரசாரப் பிரசுரங்களையும் நூற்களையும் எழுதி
வெளியிட்டனர். அவர்கள், சாதாரண மக்களுக்கும் தமிழ்
எழுத்தாளர்களுக்கும் நடுவேயிருந்து விசாலமான இடைவெளியைப்
பெருமளவுக்குக் குறைத்தனர். தமிழ் எழுத்தாளர்களுக்கும் எளிய
மக்களுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தினர். இந்த மகத்தான மாறுதலைச்
செய்த பெஸ்கி, போப் போன்ற கிறித்துவப் பாதிரிமார்கள் தமிழ் மொழியின்
வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுவிட்டனர்.
கிறித்துவப் பாதிரிமார்களும், வள்ளலார்- ஆறுமுக நாவலர்
போன்ற சான்றோர்களும் இயற்றிய உரைநடை நூல்கள்
பெரும்பாலும் சமயச்சார்புடையவை. சமயங் கடந்து சமுதாய
முன்னேற்றத்திற்குப் பயன்படும்பொது அறிவு நூல்களை அவர்கள்