பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 183

படைக்கவில்லை.   அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் அரசியல்
புரட்சி   இலக்கியங்களே  அந்நாளில்  மக்களின்  அவசியத்  தேவைகளாக
இருந்தன.   பிரிட்டிஷ்  மிஷினரிகளான   பாதிரிமார்களோ,   அரசியலுக்கு
முற்றிலும்  விலக்காக வாழ்ந்த வள்ளலார், நாவலர் போன்ற சான்றோர்களோ
அந்தத்   தேவையைப்  பூர்த்தி  செய்ய  இயலாதவர்களாயினர்.  அதனால்,
மக்களுடைய  பொது   அறிவை   வளர்க்கவும்,   அரசியல்  உணர்ச்சியை
அவர்களுக்கு  ஊட்டவும்  தேவைப்பட்ட  சமூக நூல்களை முதன் முதலாக
தமிழ்     உரைநடையிலே    வழங்கிய   பெருமை   தேசியவாதிகளுக்கே
உரிமையாகிவிட்டது. இதிலே யாருக்கும் கருத்து வேற்றுமையிருக்க முடியாது.

      தேசிய   இலக்கியங்களைப்   படைத்த எழுத்தாளர்களுக்கு அன்னிய
ஆட்சிதந்த  தொல்லைகள்  கொஞ்சமன்று.  அபராதம்,  சிறைவாசம்,  நாடு
கடத்தல் ஆகியவற்றை எல்லாம் அவர்கள் பரிசாகப் பெற்றனர். அந்நாளைய
தேசிய    எழுத்தாளர்கள்,  முன்னறிவிப்பு   தரும்   துண்டுப்  பிரசுரங்கள்,
விஷயஞானத்தை   வளர்க்கும்   சிறு   பிரசுரங்கள்,   செய்தி   இதழ்கள்,
வாராந்திர  மாதாந்திர    கருத்திதழ்கள்,   சிறப்பு   மலர்கள் ஆகியவற்றை
வெளியிட்டு   தமிழ்  உரைநடையை வளப்படுத்தினர். இந்த அரும்பணியிலே
ஈடுபட்ட தேசியவாதிகள் நூற்றுக்கணக்கானவர் என்று கூறலாம்.

     தமிழ்   உரைநடையிலே   மறுமலர்ச்சி   காணும்   திறனும் துணிவும்
அந்நாளைய தேசிய வாதிகளுக்கு இருந்ததில்லையானால், சாதாரணப் பொது
மக்களோடு   நெருங்கிய   தொடர்பு   கொள்ளவோ, அவர்களை எல்லாம்
விடுதலைப்   போராட்டத்தில்  ஈடுபடுத்தும் குறிக்கோளில் வெற்றிகாணவோ
அவர்களால் முடிந்திருக்காது. 

சொல்லாட்சி!

     சுதந்திரம்,  சமத்துவம்,  ஜனநாயகம்  ஆகிய உயர்ந்த கொள்கைகளை
மக்களிடையே  பரப்பும் பணியைத் தேசியவாதிகள் மேற்கொண்டனராதலால்,
அந்தப் பணிக்கு,  வெற்றிதேடும் பிரச்சாரக்கருவியாக தமிழ் உரைநடையைப்
பயன்படுத்தினராதலால்  புதிய புதிய   சொற்களையும் சொற்றொடர்களையும்
படைத்து தமிழ் மொழியை வளர்த்தனர்.

      மகாகவி     பாரதியார்,   "சுதந்தரம்"   என்பதனை     "விடுதலை"
என்றும்,   "கம்யூனிசம்"    என்பதனைப்    "பொதுவுடைமை"     என்றும்