தமிழில் கூறினார். பாரதியார் புதிதாகத் தந்த இந்தச் சொற்கள் தமிழக
அரசியல் வட்டாரத்தில் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்று விட்டன. திரு.வி.க. அவர்கள், "பார்லிமெண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லை,
"பாராளுமன்றம்" என்றும், "மகாத்மா" என்பதனை "அடிகள்" என்றும்
தமிழ்ப்படுத்தினார். இன்னும் வ.உ.சிதம்பரனார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய
சிவா, 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி ஆகிய தேசியவாதிகள் ஏராளமான
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தினர்.
பத்திரிகை உலகத்தை எடுத்துக்கொண்டால், கருத்தோட்டத்தையும்
கவர்ச்சியைபும் தரக்கூடிய எத்தனை எத்தனையோ புதிய சொற்களைப்
படைத்துத் தந்த பெருமை தேசியவாதிகளுக்கு உண்டு. இது, தனி
ஆராய்ச்சிக்குரியதாகும். தேசியவாதிகள், உரைநடையில் - ஏன், கவிதை
நடையில் கூட எளிய மக்களுக்குப் பயன்படத்தக்க வகையில் மறுமலர்ச்சி
கண்டில்லையானால், இந்தியாவிலுள்ள பிரதேச மொழிகள் எல்லாமே
வளர்ச்சியற்றுப் போயிருக்கும். ஆங்கில ஆதிக்கம் இப்போதிருப்பதினும்
இன்னும் அதிகக் கொடுமை மிக்கதாக இருந்திருக்கும். அந்த விபத்திலிருந்து
பிரதேச மொழிகளைக் காத்து, வளர்த்து, அவற்றிற்குப் புதுவாழ்வளித்த
பெருமை இந்திய தேசியவாதிகளுக்கே உரியதாகும். ஆனால், இந்த உண்மை
காலந்தோறும் தமிழ் வளர்ந்து வந்த வரலாற்றைக் கூறும் நூல்களிலே எந்த
ஒன்றிலும் சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை.
காலந்தோறும் தமிழ் வளர்ந்த வரலாற்றை விமர்சிப்போர் பெரும்பாலும்
புலவர் பெருமக்களாகவே இருக்கின்றனர். இவர்கள் பார்வையிலே
தேசியவாதிகள் படைத்த மறுமலர்ச்சி உரைநடை தூய தமிழாகக் காட்சி
தரவில்லை. அதனால்,இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலே தேசியவாதிகள்
தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணி பெரும் புலவர்களின்
கருத்தைக் கவரவில்லை. அந்த மறுமலர்ச்சியைத் தமிழுக்கு ஏற்பட்டுவிட்ட
ஒரு விபத்தாகக் கருதும் மொழி வைதிகர்களும் இருக்கின்றனர். அவர்களிலே
சிலர், எளிய நடையிலே பாரதி பாடிய தேசியப் பாடல்களைக்
குறைகூறியும், கேலி செய்தும் கண்டனக் குரல் எழுப்பினர்.
தேசிய வாதிகளின் முன்னேற்றத்திற்கும் அவர்களுடைய அறிவு