பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 185

வளர்ச்சிக்கும்    எந்த     அளவு    பயன்பட்டிருக்கிறது   என்பதனைக்
கருத்திற்கொள்ளாமல்,  எந்த  அளவு   தமிழின்    தூய்மையைக்  காக்கத்
தவறிவிட்டனர் என்பதையே நினைவில் கொள்கின்றனர்.

பழகு தமிழா, பண்டிதர் தமிழா!

     விடுதலைப்  போராட்ட  காலத்தில்  வாழ்ந்த தேசியவாதிகள் மொழித்
துறையிலே  வைதிகத்தை  அதிக  அளவில்  கடைப்பிடிக்கவில்லை என்பது
உண்மைதான்.  அதற்குக்  காரணம்,  தமிழ்  மொழியின் தனித் தன்மையைக்
காப்பதிலே  அவர்களுக்கு  அக்கரையிருக்கவில்லை என்பதன்று. அதற்கான
சூழ்நிலை  அவர்களுக்கு அப்போது இருக்கவில்லை என்பதுதான். "பகைவன்
எதிர்ப்பட்டால்,  கிடைத்ததை  எடுத்து  அடி" என்றொரு பழமொழி உண்டு.
அதுபோல்,  இந்திய  மக்களின்  எதிரியான  பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தை
எதிர்க்கும்  போர்க்   களத்தில்  நின்று கொண்டிருந்த  நாளிலே,  மொழித்
துறையில்  வைதிகத்தைக்  கடைப்பிடிப்பது  தேசியவாதிகளுக்கு சாத்தியமாக
இல்லை.  அதனால்   தமிழரிடையே  வழக்கிலிருந்த -  மக்களுக்கு  நன்கு
தெரிந்திருந்த  சொற்களையே  பயன்படுத்திப் பிரச்சாரம்  நடத்தினர். அந்த
அளவுக்குச்    செல்லவிரும்பாத   தூய   தமிழ்ப்   புலவர்கள்  விடுதலை
இயக்கத்தோடு     தொடர்புகொள்ள     இயலாதவர்களாயினர்.   தமிழின்
தூய்மையைக்    காப்பதிலே     கொண்டிருந்த    ஆர்வத்தால் அவர்கள்
பொதுமக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தனர்.

     விடுதலைப்போரில்  தமிழ்ப்பெரும்  புலவர்கள் அதிக அளவில் பங்கு
கொண்டதாக  வரலாறு   கூறவில்லை.  அவர்கள்  தேசபக்தி  அற்றவர்கள்
என்றோ,  விடுதலைப் போரில் ஈடுபடுவதற்கான வீரமில்லாதவர்கள் என்றோ
யாரும்  சொல்வதற்கில்லை.  நாளுக்கு  நாள்  சாதாரணப்  பொது மக்களை
நோக்கி, வெகு  வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த தேசியவாதிகளோடு
கைகோர்த்து     நடைபோட    அவர்களால்    முடியவில்லை.   அப்படி
நடைபோட்டிருந்தால்,   தூய  தமிழ் வைதிகத்தைக் கைவிட்டாக வேண்டிய
கட்டாயம் புலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதனால், தங்கள் வைதிகத்தைக்
காத்துக்  கொள்வதற்காகவே  அவர்கள்  விடுதலைப்  போருக்கு விலக்காக
வாழ்ந்தனர் போலும்.