பக்கம் எண் :

194விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

இயற்றிய காலத்தில்  -  தமிழ்  இலக்கியக்  களஞ்சியத்திற்குக் கிடைத்த ஒரு
புதுவரவு   என்று   கூறலாம். அவ்வப்போது எழும் அரசியல், பொருளாதார,
மொழிச்சிக்கல்களைத்   தெளிவுபடுத்தி   மக்களுக்கு  வழிகாட்டும் வகையில்
ராஜாஜி வரைந்துள்ள கருத்தோவியங்களும் நூல்களாக வெளிவந்துள்ளன.

'கல்கி'யின் உரைநடை!

     தமிழ்  எழுத்தாளர்  உலகிலே திரு.வி.கலியாணசுந்தரனாரின் வாரிசாகத்
தோன்றிய   'கல்கி'   ரா.கிருஷ்ணமூர்த்தி    உரைநடையின்    வளர்ச்சிக்கு
ஆற்றியுள்ள   அரும்பணிகள்  ஒரு  தனி நூலுக்குரியவையாகும். 'கல்கி'யின்
கதைகளையும்,  கட்டுரைகளையும்  விரிவாக  விமர்சித்து  எழுதினால், அது
பத்தொன்பதாம்   நூற்றாண்டின்  முற்பாதியில்  தமிழ் வளர்ந்த வரலாற்றைக்
கூறும் முழு நூலாக அமையும். உரைநடைத் தமிழைக் கருவியாகக்   கொண்டு
அவர்    தொடாத    துறையே    இல்லை    எனலாம்.  அவர்  இயற்றிய
'அலையோசை'யை   விமர்சிக்கும்   'தமிழ் கலைக்களஞ்சியம் ,'1 "விடுதலைப்
போராட்டம்   முழுவதனையும்  இந்தியச்  சூழ்நிலையோடு     ஒன்றுபடுத்தி
விளங்குகின்றது.  இது,  காந்தி  யுகத்தின் புராணம்" என்று கூறுகின்றது. இது
முற்றிலும் உண்மை.

      புதுவை   ஆனந்தரங்கம்   பிள்ளை   எழுதி   வைத்துள்ள  'டைரி'
கொச்சைத்    தமிழில்   அமைந்திருப்பினும்,  சரித்திர தஸ்தாவேசு என்னும்
பெருமையைப்   பெற்றுவிட்டது.  அதனால், பிரெஞ்சு - ஆங்கிலம் முதலிய
ஐரோப்பிய  மொழிகளிலெல்லாம்  அந்த டைரி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழிலே   வெறும்   கையெழுத்துப்   பிரதியாகவே இருந்து வந்த அதனை
முதன்   முதலாக  அச்சேற்றிய   பெருமை  தேசபக்தர் வ.வே.சு ஐயருக்கே
உரிமையாகும்.   அவரது   'பால பாரதி'   மாத   இதழிலே, ஆனந்தரங்கம்
பிள்ளையின் 'டைரி' தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வந்தது.

     பிறநாட்டு  நல்லறிஞர்  சாத்திரங்களையும் சரித்திரங்களையும் தமிழிலே
மொழி பெயர்க்கும் பணியினையும் தேசியவாதிகள் திறம் படச் செய்துள்ளனர்.

     மகாகவி     சுப்பிரமணிய    பாரதியார்,    வங்க    நாட்டுக்   கவி
ரவீந்திரநாத்   தாகூரின்   கருத்தோவியங்கள்    சிலவற்றைத்   தமிழாக்கித்


1. பகுதி1; பக்.496.