பக்கம் எண் :

196விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பழமையிலே புதுமையைக் கலக்கும்  இந்தப்  பணியைத்  திறம்படச் செய்தவர்
திரு.வி.கலியாணசுந்தரனாரேயாவார். சேக்கிழார்   பெருமான் இயற்றிய  பெரிய
புராணம்  சமய சமயத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தப் பெற்றது. மதுரையில்
ஆயிரம் சமணர்கள் திருஞானசம்பந்தப் பெருமான் தூண்டுதலால் கழுவேற்றப்
பட்டனர்  என்றொரு  கதை உண்டு. ஆராயும் திறனற்றோர், அந்தக் கதைக்கு
பெரிய புராணத்தையும் ஆதாரமாகக் கொண்டனர்.

       தேசிய  ஒருமைப்பாட்டினை  விரும்பிய  திரு.வி.கலியாணசுந்தரானர்,
சைவர்-சமணர்  பூசலை வெறுத்தார். அமிழ்தினுமினிய   தமிழ்மொழியை புறச்
சமயத்தை   அழிக்கும்  நஞ்சாகப்   பயன்படுத்துவதனைக்  கண்டு    மனம்
வருந்தினார் . சைவ - சமணப்   பூசலைப்  போக்கும்   வகையில்    பெரிய
புராணத்துக்குக் குறிப்புரை கண்டார். இது பற்றி அவரே கூறக் கேட்போம்:

    "பெரிய புராணத்துக்கு இளமையில் ஒரு  குறிப்புரை கண்டேன்; அரசியல்
உலகில்  ஈடுபட்ட  பின்னர்  ஒரு குறிப்புரை  கண்டேன். அதற்கும்  இதற்கு
மிடையேயுள்ள  வேற்றுமை  வெள்ளிடை  மலையென   விளங்கா  நிற்கிறது.
ஆள்  ஒருவன்.   வேற்றுமையுருவானேன் ? அக்கால  மனோநிலை   வேறு;
இக்கால மனோ நிலை வேறு."1

     "பெரிய புராணம் இரண்டாம் பதிப்பில் புரட்சி நிகழ்ந்துள்ளது.  உரிமை,
புரட்சியை நிகழ்த்தி நிலைமையைச் சீர்செய்வது இயற்கையே. என்ன  புரட்சி?
ஜைனத்தைப்  பற்றிச்  சைவ  உலகில் சில  கறைகள் படிந்தன. அக்கறைகள்
உரையால் களையப்பட்டன. அக்களைவே புரட்சியாயிற்று. திருஞான சம்பந்தர்,
பெண்ணின் பெருமையும்  இயற்கை இன்பமும்  செழிக்கச்  சேவை  செய்தவ
ரென்பதும், அவர் சமண உலகையே அழிக்கப் போந்தவர்   அல்லரென்பதும்,
திகம்பர ஜைனத்துள் இடைநாளில் புகுந்த சில மாசுகளைக்  களையவே அவர்
முயன்றார் என்பதும்... எனது உரையில் விளக்கப்பட்டன."2

     இப்படி, தமிழில் உள்ள இதிகாச-புராணங்களையும்,  சாத்திர-தோத்திரங்
களையும் சார்ந்து எழுந்த சமயப் பூசல்களை ஒழிக்க தேசியவாதிகள் ஆற்றிய
பெருந்தொண்டு  இலக்கியத் துறையிலே கருத்துப் புரட்சியை   உருவாக்கியது.


1. திரு.வி.க.வா.குறிப்புகள்; பக்.116.  
2. திரு.வி.க.வா.குறிப்புகள்; பக்.142