பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 197

காந்தியடிகள், மகாபாரதக் கதையின் பாத்திரங்கள் சரித்திர நாயக - நாயகியர்
அல்லர்  என்றும்,  வியாச  முனிவர்  கற்பித்தவர்களே என்றும் கூறியுள்ளார்.
இராஜாஜி,  தாம்  இயற்றிய  'சக்கரவர்த்தித்  திருமகன்'  என்ற  நூலில்,நிறை
கர்ப்பவதியான   சீதையை   இராமன்   வனத்திற்கனுப்பிய  ரீதியில்   புதிய
விளக்கங்களைத் தந்துள்ளார்.

     பாண்டவருக்கும்     துரியோதனாதியருக்குமிடையே       நடைபெற்ற
மாபாரதப் போர்பற்றி மகாகவி பாரதியார் தரும் விளக்கம் வருமாறு:

    "ஒரு  சங்கத்தின் -  ஒரு ஜாதியின் - ஒரு தேசத்தின் - அறிவு மழுங்கா
திருக்கும்  வரை  அதற்கு நாசம் ஏற்படாது.  பாரததேசத்தில் முற்காலத்திலே
பாரத  சாதி  முழுமையும் அறிவுக்குப் பொறுப்பாளியாகப்பிராமணர் என்னும்
பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாக பழைய நூல்களிலே காணப்படுகிறது.
அந்தப்  பிராமணர்தமது  கடமைகளைத்  தவறாது நடத்தியிருப்பார்களானால்,
மற்ற   குலத்தவரும்   நெறி  தவறியிருக்கமாட்டார்கள்;  மஹா  பாரதப்போர்
நடந்திராது;   பாரத  தேசத்தில்  பெரியதோர்  க்ஷத்திரிய  நாசமும்  கலியும்
வந்திருக்க மாட்டா."1

     தமிழ்   மொழியில்   நிறைந்த   புலமை  பெற்ற  பெரும்  புலவர்கள்
பழைமையிலேயே  ஊறிக் கிடந்தனர். பழைய நூற்களுக்குத் தாங்கள் இயற்றிய
உரைகளிலேயும்   சாதிசமயப்   பூசல்களுக்கு   வழி   வகுத்தனர்.   பாரத
மக்களையெலாம்  ஒன்றுபடுத்தும்  பணிக்குப்  பெரும்  புலவர்கள்  தங்களை
அர்ப்பணித்துக்  கொள்ளவில்லை.  கால  மாறுதல்கள்  கூட அவர்களுடைய
கண்களைத்   திறக்கவில்லை.   வடலூர்  இராமலிங்க  சுவாமிகள்  புராண -
இதிகாசங் களிலுள்ள குறைபாடுளை எடுத்துக் காட்டி இடித்துக் கூறியும் சைவ
- வைணவப்  புலவர்கள்  திருந்தினார்களில்லை.  ஆனால், பெரு வெள்ளம்
போன்று குமரி முதல் இமயம் வரையில் உள்ள நிலப்பரப்பிலே பெருக்கெடுத்
தோடிய தேசிய எழுச்சியானது பத்தாம் பசலிப் புலவர்களை மக்களிடமிருந்து
ஒதுக்கிவிட்டது.  பழமையிலே  புத்தொளிபாய்ச்சி,  புரட்சி உள்ளம் படைத்த
புதிய தேசியப் புலவர்பரம்பரையைத் தோற்றுவித்தது.


1. பாஞ்சாலி சபதம் முன்னுரையில்