நேரும் குதிரை அணிஅணி யாய்வைத்து நீளிட்ட செண்டாக்கொடியும் நட்டிக் காரும் கடல்போல் நிறைந்த பட்டாளங்கள் கம்மென் றிருந்த விடியுமட்டும் தன் கோட்டையை முற்றுகையிட்ட வெள்ளையரின் செயல் கண்டு வீரபாண்டியக் கட்டபொம்மன் வீறுகொண்டுரைத்த வாசகம் வருமாறு: ஏகச் சமுத்திரம் என்படை என்சனம் இல்லையென் றோவந்தான் காலன்துரை? சாகத்து ணிந்த வனுக்குச் சமுத்திரம் தன்முழங் காலள வென்று ரைப்பார். காலனைக் கொல்கிறேன் பிற்கட்டை வெல்கிறேன் கண்டதுண் டப்படை பட்டுவிழ மூல பலச்சண்டை வாய்த்தது போல்சக தேவிமுன் னிற்க அடித்தொ ழிப்பேன் காலின்ஸ் என்ற ஆங்கிலேயன் பெயரை 'காலன்' என்று திரித்துக் கூறுகிறார் கவிஞர். காலின்ஸ், பிற்கட்டு என்ற இருவரும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை மீது படையெடுத்த வெள்ளத் தளபதிகளாவர். வீரபாண்டியம் கட்டபொம்மன் புகழ்பாடும் தமிழ் இலக்கியங்களிலே மிக அண்மைக் காலத்தில் படைக்கப்பட்ட "வீரபாண்டியம்". அநேகமாக, பாஞ்சாலங்குறிச்சிப் போர் பற்றிய இலக்கியங்கள் அனைத்துமே வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பெற்றெடுத்த கம்பளத்துச் சாதியில் தோன்றிய புலவர்கள் பாடியவையாகவே இருக்கக் காண்கிறோம்."வீரபாண்டியம்" பாடிய மதுரை ஜெகவீரபாண்டியனாரும் கம்பளத்து நாயக்கர் என்றே அறிகின்றோம். கட்டபொம்மன் வெள்ளையருக்கு வரி கொடுக்க மறுத்துரைக்கின்ற வீர வாசகம் , " வானம் பொழியுது " , பூமி விளையுது ", மன்னவன் காணிக்கு ஏது கிஸ்தி?" என்பதாகும் . அந்த வாசகத்தை, வானம் மாமழை பொழிதர மாநிலம் விளைய ஆன பேரரசு யான்புரந் தருளுவன் இடையே ஊன மாகவந் தொருவரி தருகவென்றுரைத்தாய் தானம் என்னிலோ தருகுவன் வரி எனில் தாரேன் என்ற பாடலிலே எதிரொலிக்கிறார் ஜெகவீர பாண்டியனார். |