வீரபாண்டியக் கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்ட செய்தியறிந்த அம் மாவீரனின் மனைவி வீரசக்கம்மாள் புலம்புவதாகவுள்ள பாடல்கள் வருமாறு: கோடிசனம் நிறைந்திருக்கக் குலநகரம் நிலைத்திருக்கக் கொற்றம் இல்லாப் பேடியர்முன் பிழையாகப் பிழையாத பெருவீரம் பிழைத்து நீயும் வீடினையே விறல்மதனா! இதையறிந்தும் என்ஆவி வீயாதின்னும் நீடியுடல் நிலைத்துளதே நிலைதெரியாக் கொடுவினையின் நிலைதான் என்னே! கோலமுழு மதியனைய திருமுகத்தின் பொலிவெங்கே? குலத்தோள் எங்கே? மாலைதவழ் மார்பெங்கே? வண்குமுத மலர்என்ன மலர்ந்த செவ்வாய்க் கோலம்எங்கே? குணம் எங்கே? குலவீரத் திறல்எங்கே? குளிர நோக்கும் நீலவிழி நிலைஎங்கே? நிமிர்மீசைச் செறிவெங்கே? நெறிதான் எங்கே? என்னுயிரே! என்உணர்வே! என்கண்ணே! என்துரையே! என்னை யிங்கே துன்னுதுயர்க் கடல்விடுத்துத் துணையின்றித் தனியிருத்தல் சுகமோ? சொல்லாய்! பன்னியடுத் தார்தம்மைப் பாதுகாத் தருள்வதென்றும் பாஞ்சை மன்னர்க்கு உன்னரிய உரிமையன்றோ? உரியவளைக் காவாமல் ஒளிய லாமோ? பாரதத்தின் விடுதலைப்போரைத் துவக்கி வைத்து, தூக்கு மரத்திலே உயிர்நீத்த வீரபாண்டியக் கட்டபொம்முவின் முடிவைக் கூறும் பாடல் வருமாறு: எந்நாட்டும் திறைநாட்டி இரும்பொருளை மிகஈட்டி எங்கும் ஆட்சி முன்னாட்டி மூண்டுவந்த கும்பினியும் கம்பமுற முனைந்தெ திர்ந்து |