நகரங்களிலே நாடகம் நடத்திய கலைஞர்கள், சிறிது காலங் கடந்து தான்
விடுதலை இயக்கத்தோடு தொடர்பு கொண்டனர். காந்தி சகாப்தத்தில்தானே
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சி பொது ஜன இயக்கமாக மாறியது. தேசிய
இயக்கத்தோடு தொடர்பு கொண்டால்தான் ரசிகப் பெருமக்களின் ஆதரவை
நடிக நடிகையர் பெற முடியும் என்ற நிலை உருவானது. அதனால்
நகரங்களிலே நாடகம் நடத்திய கலைஞர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்,
தேசிய நாடகங்களை எழுதுவதிலேயும் நடத்துவதிலேயும் பிற நாடகாசிரியர்
களுக்கு முன்னோடியாக விளங்கினார். நாடக மேடையின் வாயிலாகவும் தேசியப் பிரச்சாரம் செய்யும்
குறிக்கோளுடன், நாடகத் துறையில் ஈடுபட்டார் பாவலர். 'பால மனோகர
சபா' என்ற பெயரில் தனியாக ஒரு நாடகக் குழுவினை நடத்தினார். 'கதரின்
வெற்றி' உட்பட தேசிய நாடகங்கள் பலவற்றை எழுதினார்.
பெரியார் ஈ.வெ.ரா.,காங்கிரசிலிருந்து வெளியேறி நாத்திகப் பிரச்சாரத்தில்
ஈடுபட்டபோது தம்முடைய தெய்வ பக்தி - தேச பக்தி காரணமாக, அவரை எதிர்த்துப் போராடினார் பாவலர். அதற்கெனவே 'ஆஸ்திக சங்கம்' என்னும் பெயரில் தனி அமைப்பொன்றையும் கண்டார்.
தாம் பெற்றிருந்த நாவன்மை பாவன்மை காரணமாக, 'சங்கத்வனி',
'பிரசங்க சிந்தாமணி', 'பாவலர்' ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிபதி பிரம்மஸ்ரீ சதாசிவ
ஐயர் தலைமையில் ஒருமுறையும், மதுரையில் பெரும்புலவர் அரசஞ்
சண்முகனார் முன்னிலையில் ஒரு முறையும் சோடசாவதானம் செய்து, இந்த
இரண்டு சந்தர்ப்பங்களிலும் 'சோடசாவதானி' என்னும் பட்டத்தைப் பெற்றார்.
சென்னையிலே உயர் நிலைப்பள்ளி ஒன்றில் தமிழசிரியராகப் பணிபுரிந்த
பாவலர், தேசபக்தி காரணமாக ஆசிரியத் தொழிலை விட்டார். காங்கிரசிலே
சேர்ந்து, அரசியலில் ஈடுபட்டார். சில ஆண்டுகள் சென்னை மாவட்ட
காங்கிரஸ் அங்கத்தினராகவும் இருந்தார். அந்நாளில் அகில இந்தியாவிலும்
செல்வாக்குப் பெற்றிருந்த மயிலை எஸ்.சீனிவாச ஐயங்கார் அவர்களுடன்
பாவலர் நெருங்கிய தோழமை கொண்டிருந்தார். சிறந்த மேடைப்பேச்
சாளராகவும் விளங்கினார்.