தமது சிறுவர் நாடகக் குழுவைக் கொண்டு தமிழகம் முழுவதிலும்
அவற்றை நடத்தி விடுதலைக் கிளர்ச்சியை வலுப்படுத்தினார். 1930 ஆம் ஆண்டில் வடக்கே நாகபுரியில் நடைபெற்ற கொடிப்
போராட்டத்தைக் கருப்பொருளாக்கி, அந்தப் போராட்டத்தில் கதாநாயகன்
கலந்து கொள்வதாகக் கற்பித்து, 'தேசியக் கொடி' என்னும் பெயரில் ஒரு
நாடகத்தை எழுதினார். அதனை நாடு முழுவதும் நடத்திக் காட்டினார்.
1942க்குப் பின் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் ஆசிரியப்
பொறுப்பை ஏற்றார். 'கதரின் வெற்றி', 'பதிபக்தி', 'பம்பாய் மெயில்', 'கவர்னர்ஸ்
கப்' ஆகிய தேசிய மணங்கமழும் சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி,
அவற்றை நடத்தி வைத்தார்.
பாவலரின் தேசிய நாடகங்களால் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுப்பெற்று
வருவதைக் கண்ட ஆட்சி, சில ஊர்களில் அந்த நாடகங்களை நடத்த
வொட்டாமல் தடை விதித்தது. அந்தத் தடைகளை மிகுந்த தந்திரத்துடன்
சமாளித்தும், சில சந்தர்ப்பங்களில் தடையை மீறியும் நாடகங்களை
நடத்தியிருக்கிறார்.
தமது சிறுவர் நாடகக் குழுவுடன் பிரிட்டனுக்குச் சென்று அங்கு ஐந்தாம்
ஜார்ஜ் சக்ரவர்த்தியின் முடிசூட்டு விழாவையொட்டி நடைபெற்ற 'வெம்பிளிக்
கண்காட்சி'யிலே 'பதிபக்தி', 'கதரின் வெற்றி' ஆகிய தேசிய நாடகங்களையும்;
'வள்ளித் திருமணம்' போன்ற புராண நாடகங்களையும் நடத்தி, நாடகத்
தமிழுக்குப் புகழ் தேடினார்.
தலைசிறந்த தேசியவாதியாகவும் தேச விடுதலைப் போராட்ட
வீரராகவும் தமிழ் நாடகத்துறையிலே புதுமை பல நிகழ்த்திய புரட்சி
வீரராகவும் திகழ்ந்த கிருஷ்ணசாமிப் பாவலர், தேசியத்தின் துணை கொண்டு
நாடகத்தமிழை வளர்த்தார். நாடகத் தமிழின் துணை கொண்டு தேசியத்தை
வலுப்படுத்தினார். தமிழ் - தேசியம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி நாடகக்
கலையிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தேசபக்த பாரம் பரியத்தின்
வாரிசுகளானோர் தங்கள் முன்னோரான கிருஷ்ணசாமிப் பாவலருக்கு தக்க
நினைவுச் சின்னம் அமைக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். இன்றைய நாடக -
திரைப்படக் கலைஞர்களுக்கும் இந்தக் கடமை உண்டு.