"நாட்டிலே சுதந்திர உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில்,
மக்கள் அடியை வாங்கிக் கொண்டு - உதையை வாங்கிக் கொண்டு - தியாகம்
செய்து கொண்டிருந்த நேரத்தில், அந்த மக்களுக்கு உணர்ச்சியூட்டி, நாட்டிற்கு
நல்லதைச் சொல்லி, தேசிய எழுச்சியைத் தூண்டிவிட்டு, தடியடியானாலும் சரி -
துப்பாக்கிக் குண்டுகளானாலும் சரி - சிறை செல்வதானாலும் சரி -
ஏற்றுக்கொள்ளத் தயார் என்று துணிந்து முன்வந்த ஒரு சிறந்த நாடகப்
பேராசிரியர் கிருஷ்ணசாமிப் பாவலர் என்பதை என்னால் உறுதியாகக் கூற
முடியும்.”
"பாவலர் அவர்கள் தம்முடைய திறமையை தமக்குச் சொத்து சேர்க்கப்
பயன்படுத்திக்கொண்டவரல்லர். தமது உள்ளத்திலே எழுந்த சுதந்திர உணர்ச்சி,
நாட்டு மக்களிடையே ஏற்பட வேண்டுமென்று விரும்பினார்."1
நாடகப் பேராசிரியரும் சுமார் 100 நாடக நூற்களை எழுதியவருமான
'பதும விபூஷணம்' ப.சம்பந்த முதலியார், நாடகத் தமிழுக்குப் பாவலர்
ஆற்றியுள்ள தொண்டுபற்றித் தமது நூலொன்றில் வருணித்துள்ளார். அது
வருமாறு:
"திரு.கிருஷ்ணசாமிப் பாவலர் சிறுவயதில் என்னுடன் சுகுணவிலாச
சபையில் நடித்தவர். என்னுடன் 'சாரங்கதாரா'வில் சுமந்திரராகவும்,
"மனோகரா'வில் ராஜப் பிரியனாகவும் நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது.
இவர் தமிழில் நல்ல தேர்ச்சிப் பெற்றவர். கவிகள் பாடுவதில் சிறந்த
பெயரெடுத்தவர். ஒரு விதத்தில் 'ஆசு கவி' என்றே கூறலாம். அவ்வளவு
விரைவாக விருத்தங்கள் கட்டுவார். தனது நாடகங்களுக்கு வேண்டிய
பாட்டுகளை தானே கட்டியிருக்கிறார்."2
1. சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா மலரில் எம்.ஜி.ஆர். எழுதியுள்ள
கட்டுரையிலிருந்து.
2. 'நான் கண்ட நாடகக் கலைஞர்கள்', பக்.15.