பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 209

தற்காக அங்கு கலகம்   நடந்தது.   அந்தக்   கலகத்தை அடக்குவதற்காக,
போலீசார்  தலைவர்கள்   யாவரையும்   கைது செய்து,  பொதுமக்களையும்
பயமுறுத்தி  வைத்திருந்தனர்.  ஒரு வருடத்திற்கு  மேலாகக் கரூரில் பொதுக்
கூட்டம்  கூடுவதில்லை.  கதர் அணிந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர
அஞ்சினார்கள்.  அரசியல்  விஷயங்களைப்பற்றி  மக்கள்  நினைப்பது கூடக்
கிடையாது..."1

     தியாகி   சுப்பிரமணிய  சிவம்,  மொகலாய  ஆதிக்கத்தை  எதிர்த்துப்
போராடி  மாண்ட  சிவாஜி  -  செஞ்சி  தேசிங்கு   ஆகிய   மாவீரர்களின்
வரலாறுகளை  பிரிட்டிஷ்  ஏகாதிபத்திய எதிர்ப்புக்குப் பயன்படும்  வகையில்
நாடகங்களாக எழுதினார். அவற்றை, சிவமும் அவருடைய "ஸ்ரீ பாரத விலாச
சபை" யினரும் தமிழகமெங்கணும் சென்று நடித்துக் காட்டினர்.  நாடகங்களில்
வசூலான பணத்தைத் தேச விடுதலை இயக்கத்திற்காகப் பயன்படுத்தினர்.சிவா
குழுவினரின்     "தேசிங்கு"     நாடகம்     சிதம்பரத்திலே    அரசினால்
தடைசெய்யப்பட்டது. அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாடகத்தை நடத்திய
தேசபக்தர்கள் சார்பாக அப்போதைய சென்னை சட்டமன்றத்திலே கண்டனக்
குரல் கொடுத்தார் நாவலர் சத்தியமூர்த்தி.

   சுப்பிரமணிய சிவம் நாடகத்தின் மூலம் நாட்டுக்கு ஆற்றிய தொண்டு பற்றி
,அதிலே அவருடன் கலந்திருந்த தேசபக்தர்களான மதுரை ரெ.சிதம்பர பாரதி,
ரா.சீனிவாசவரதன் இருவரும் தரும் தகவல் வருமாறு:

     "தேசிய  உணர்ச்சி  ததும்பும் நாடகங்களை எழுதி, பல வாலிபர்களைக்
கொண்டு  நடிக்கச்  செய்து,  தானும் அதிலே வேடந்தாங்கி நடித்திருக்கிறார்
நமது சிவம்.

      "காரைக்குடியிலும் தருமபுரியிலும் நாடகங்கள் நடத்தி ஜனங்களிடையே
உணர்ச்சியுண்டு   பண்ணினார்.  அதே  போன்று  மதுரையம்பதியிலும்  பல
நாடகங்கள்  நடைபெற்றன.  சிதம்பரத்தில்   தடை  செய்யப்பட்ட  "சிவாஜி"
நாடகத்தை  மதுரையில்  பெரிய தகரக் கொட்டகையில் நடித்துக்  காண்பிக்க
ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிவம்  சமர்த்த ராமதாசராக வேடம்  தாங்கி
நடித்தது தத்ரூபமாகவே இருந்தது.


1. மதுரைமாவட்ட தியாகிகள் மலர்; பக்.20.