பக்கம் எண் :

210விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு



     "அடுத்து தேசிங்குராசன் சரிதம் மதுரை மேலமாசி வீதிக்கொட்டகையில்
நடத்தப்பெற்றது.ஒவ்வொரு நாடகத்திலும் ரா.ஸ்ரீனிவாசவரதன் கதாநாயகனாகத்
தோன்றுவார். நெல்லை. ந.சோமயாசுலு கதாநாயகியாகத் தோன்றுவார். நடிப்புத்
திறமை அன்னார்களுக்கு அதிகம். முக்கியமாக  சுந்தர பாரதியின்  ஹாஸ்ய
நடிப்பு யாவரையும் ஆனந்தத்தில் மூழ்க வைக்கும்."1

ஐயரும் நடிகரே!

      தேச  விடுதலைப்  போருக்கு  வெற்றி  தேடும்  பொருட்டாக நாடகப்
பணியில்  ஈடுபட்டவர்களில்  வ.வே.சு.ஐயரும் ஒருவராவார்.  ஐயரின் நாடகப்
பணிபற்றித் திரு.வெ.சாமிநாத சர்மா கூறுவது வருமாறு:

     "ஐயரை,  புரட்சி  வீரராகவும்  நூலாசிரியராகவும் சேரமாதேவி குருகுல
ஸ்தாபகராகவுமே  தமிழ் நாட்டில் பலர் அறிவர். ஆனால், அவர் ஒரு சிறந்த
நடிகர்  என்பது பலருக்குத் தெரியாது. அவர், நாடகக் கலையின் நுட்பங்களை
நன்கு   அறிந்தவர்.   அவருக்குப்   பல  மொழிகள்  தெரிந்திருந்தபடியால்
ஒவ்வொரு   மொழியிலும்   நாடகக்கலை   எப்படி  வளர்ந்து  வந்திருக்கிற
தென்பதை ஆராய்ச்சி செய்து வைத்திருந்தார்.

     "ஆங்கிலப்  புலவனான   ஷேக்ஸ்பியர்   நாடகங்களிலும்  பிரெஞ்சுப்
புலவனான  ராஸீன் என்பவனுடைய நாடகங்களிலும் அவருக்குத் தனிக்காதல்.
அவற்றில்  சிலவற்றையேனும்  தமிழ்  மக்களுக்கு  அறிமுகப்படுத்தி  வைக்க
வேண்டுமென்பது அவருடைய ஆவல்.

     தமது  அருமந்தன்ன  குழந்தை   செல்வி சுபத்திராவுக்கு, ஷேக்ஸ்பியர்
நாடகங்களில்  ஒன்றான  ஜூலியஸ்   சீஸர்  என்னும்  நாடகத்தில்   வரும்
போர்ஷியாவாகவும்,  ஜான்ஸி  ராணி   லட்சுமி பாயாகவும்  நடிக்கக் கற்றுக்
கொடுப்பார். அந்தக் குழந்தை நடிப்பதைப் பார்த்து உள்ளம் பூரிப்பார்.

     'தேச பக்தன்' காரியாலயத்தைச் சேர்ந்த   நாங்களெல்லோரும் சேர்ந்து
த.நாராணய சாஸ்திரியார் இயற்றிய  போஜ  சரித்திர நாடகத்தை  நடிப்பதற்கு
ஏற்பாடு செய்தோம். ஐயரே இதற்கு முன்நின்றார்.


1. மதுரை மாவட்டதியாகிகள் மலர்;பக்.