பக்கம் எண் :

212விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

                நாடகத்திலே மறுமலர்ச்சி

     நாட்டில்  தோன்றிய  தேசிய எழுச்சியின் விளைவாக, உயர்தரக் கல்வி கற்றவர்களுக்கும் சாதாரணப் பொதுமக்களுக்கும் நடுவே இருந்த  இடைவெளி குறைந்தது.   இராஜகோட்திவானுக்கு    மகனாகப்   பிறந்து,     லண்டனில்
தங்கிப்படித்து, "பாரிஸ்டர்" பட்டம் பெற்ற காந்தியடிகள், இரண்டாடை உடுத்தி, தரித்திர நாராயணர்களின் தொண்டராக மாறிய  நிகழ்ச்சி - இல்லை, புரட்சி -
படித்தவர்களிடையே   மனமாற்றத்தை   ஏற்படுத்தியது.  அதன்  விளைவாக,
உயர்தரக்  கல்வி கற்று,  பல்கலைக்  கழகப்  பட்டம் பெற்றவர்களிலே சிலர்,
தத்தமக்குப்  பிடித்தமான   துறைகளிலே   ஈடுபட்டு,  சாதாரண  மக்களோடு
தொடர்பு  கொண்டு,  அவர்களுக்குத்   தொண்டாற்ற  முன்வந்தனர்.   இந்த
மாறுதல் நாடகத் துறையிலும் பிரதிபலித்தது.

      இருபதாம்  நூற்றாண்டின்  முதல்  இரண்டு  பத்தாண்டு  காலத்திலே,
நாடகத்தில் - தேசிய எழுச்சி காரணமாகவும்,தேசியவாதிகளின்  தொண்டாலும்
- மறுமலர்ச்சி ஏற்பட்டு ,  தரமும் சிறிதளவு அயர்ந்ததென்றாலும்,  'ஸ்பெஷல்
நாடகங்கள்"   என்ற    பெயரில்    அடிக்கடி    நடைபெற்ற   நாடகங்கள்
தரமுடையவையாக, உயர்தரக் கல்வி கற்ற கனவான்கள் தத்தம் குடும்பத்துடன்
சென்று பார்க்கத் தக்கவையாக இருக்கவில்லை.  அதனால், பட்டதாரிகள் பலர்
சேர்ந்து, சென்னை நகரில் 'சுகுண விலாச சபை'  என்ற பெயரில் நாடகக் குழு
ஒன்றை அமைத்தனர். இந்தப்  பணியில் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்
முன்னின்று உழைத்தார்.

     இவரால் அமைக்கப்பட்ட 'சுகுண விலாச சபை' தமிழ் -  சமஸ்கிருதம் -
தெலுங்கு  ஆகிய   மொழிகளில்  தரமான  நாடகங்களை  நடத்தி,  நாடகத்
துறையிலே மற்றொரு திருப்பத்தைக் கண்டது எனலாம். இதிலேயும் விடுதலைப்
பாசறையிலே  முன்னணியிலிருந்தோரில்  சிலர் பங்குகொண்டு பணியாற்றினர்.
சதாவதானம்  தெ.பொ.கிருஷ்ணசாமிப்   பாவலர்   சுகுண விலாச  சபையில்
சேர்ந்து பம்மல் சம்பந்தனாரோடு  பல நாடகங்களில்  நடித்ததனை  முன்பே
அறிந்தோம்.