நடிகர் சத்தியமூர்த்தி தமிழ்நாட்டு அரசியல் பெருந்தலைவர்களிலே மிகச் சிறந்த நாடக
நடிகராக விளங்கிய பெருமை நாவலர் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
உண்டு. அவர், தமிழ் - சமஸ்கிருத நாடகங்களில் நடித்து முதல்தரமான நடிகர்
என்று பெயர்பெற்றார்.
நாவலர் எஸ்,சத்தியமூர்த்தி அவர்கள், 'சுகுண விலாச சபையில் சேர்ந்து, தமிழ் - சமஸ்கிருத நாடகங்களிலே நடித்துள்ளார். இதுபற்றி, பம்மல்
முதலியாரவர்களே சொல்லக் கேட்போம்:
"இவர் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எங்கள் சுகுண விலாச சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தார். முதலில், தமிழில் சிறு பாத்திரங்களைக்
கொடுத்துப் பழக்கி வந்தேன். முதலில் கூச்சமுள்ளவராக இருந்தபோதிலும்
சீக்கிரம் அக்கூச்சம் போய் உற்சாகத்துடன் கற்று வந்தார். பிறகு வரவர பெரிய
பாத்திரங்களைக் கொடுக்கலானேன். இவரை ஒரு தைரியமுள்ள நடிகர் என்றே
கூறவேண்டும்."
"இவர் சேர்ந்த சமயம் சமஸ்கிருதப் பிரிவு ஒன்று எங்கள் சபையில்
ஆரம்பிக்கப்பட்டது. இவர் சமஸ்கிருதத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். எங்கள்
சபை நடத்திய ஒவ்வொரு சமஸ்கிருத நாடகத்திலும் பாகம் எடுத்துக் கொண்டு
வந்தார். இவர் முக்கியமாக நடித்த சமஸ்கிருத பாத்திரங்கள் 'மிருச்சகடி'
என்னும் நாடகத்தில் கதாநாயகனுடைய நண்பனாகிய வேடம் ஒன்று.
இரண்டாவதாக ‘வேணி சம்ஹாரத்'தில் அஸ்வத்தாமனாக நடித்ததாகும். இவர்
இரண்டொரு வருஷம் சமஸ்கிருத கண்டக்டராக (நடிக்கப் பயிற்றுவிப்போராக)
இருந்தார்."
“நான் சுமார் 25 வருஷம் தமிழ் கண்டக்டராக (பயிற்றுவிப்போராக)
உழைத்த பிறகு அதினின்றும் விலகிய போது எனக்குப் பிறகு கண்டக்டராக
நியமிக்கப்பட்ட பலருள் இவரும் ஒருவர்."
"எனது நண்பர் 'சுகுண விலாச சபை' பற்றி ஏளனமாகப் பேச
ஒருவருக்கும் இடம் கொடுக்கமாட்டார். அந்த சபைதான் தனக்குத் தமிழில்
நன்றாகச் சொற்பொழிவு செய்யக் கற்பித்தது என்று பன்முறை கூறியதுண்டு."1
1. நான்கண்ட நாடக நடிகர்கள்;பக்.64.