பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 215



உடலையும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டிய காலத்திலும் அவர்களுக்கு அவ்வசதிகள்  இல்லாமல்   தடுத்து,   பணம்   சம்பாதிக்க    அவர்களைப்
பயன்படுத்திக்     கொள்வது    உண்மையில்     கொடுமையான   செயல்.
18 வயதுக்குட்பட்டவர்களை நாடகங்களில் நடிக்கச் செய்யக்கூடாதென்று  ஒரு தடைச்சட்டம் இயற்ற வேண்டும்.

     "தற்கால சமூக வாழ்வு, அரசியல் இவற்றிலிருந்து குறிப்பான லட்சியத்தை
நாடகக்  கதையின் அமைப்பாகக்  கொண்டவை  பொதுவாகத்  தென்னிந்திய
நாடகங்களில் இல்லை."

     "சரித்திர  பூர்வமாகவும்,   சிருங்கார    ரஸமுள்ளதாகவும்  ருசிமிகுந்த
நாடகங்களை எழுதக்கூடியவர்கள் முயற்சி செய்யலாம்.மதுவிலக்கு, தீண்டாமை
விலக்கு,  விவாகச்  சீர்திருத்தம்  முதலிய தற்கால வாழ்க்கையிலுள்ள  சமூகப்
பிரச்சினைகளைப்    பற்றிய      நாடகங்களையும்    எழுதலாம்.    இவை
பொதுஜனங்களின்  கவனத்தைக்  கவர்ந்து  அவர்களது அறிவைப் பெருக்கப்
பயன்படும்."

      "கடைசியாக நடைமுறை அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. இதில்
விவாதத்திற்கு  இடம்  தரக்கூடிய  அம்சங்கள் நீங்கலாக,  பொதுவாய் மனித
வர்க்கத்திற்கு உகந்த  அம்சங்களைப்  பற்றித்  தேசாபிமான  உணர்ச்சியுடன்
கூடிய நாடகங்களை எழுதலாம்.

      "அநேகமாக   நாடகங்களில்   கதை  அமைப்பு,  நடிகரின்   நடிப்பு
இவற்றைவிட  சங்கீதமே  மேலோங்கி  இருக்கிறது.  நாடகத்தை  வேறாகவும்
சங்கீதத்தை வேறாகவும் தனித்தனியாகப் பாகுபாடு செய்யாாமலிருக்கிறோம்.”

      "நந்தனார்', 'வள்ளி'  இரண்டையும்  பாட்டுக்களால்  ஆனவையாகவே
செய்யலாம். இதர நாடகங்களை சங்கீதமே இல்லாமல் வைத்துக் கொள்ளலாம்.

     "இந்தச் சீர்த்திருத்தங்களால்  நாடகமும் சங்கீதமும் அதனதன் இடத்தை
அடையும்படிச் செய்யலாம்."1

      எஸ்.சத்தியமூர்த்தி    அவர்களேயன்றி,    பாரதியார்,     வ.வே.சு.
ஐயர்,      'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி,     வ.ரா.போன்ற தேசிய வாதிகளும்


1. 'சத்யமூர்த்தி பேசுகிறார்'  என்ற நூலில்  - தென்னிந்திய  நாடகம் என்னும்
பகுதியில்.