பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 219

நாடகங்களிலே கதாநாயகியாக கே.எஸ்.அனந்தநாராயண ஐயர் நடித்திருக்கிறார்.
இவ்விருவரும்  தேசபக்தியிலே ஒருவருக்கொருவர்  சளைக்காதவர்களாதலால்,
இவர்கள் இணையாகத்  தோன்றும்  நாடகங்களிலே  ஏகாதிபத்திய எதிர்ப்புப்
புயல்  வீசும்.  திரு.நடராசப்பிள்ளை  அரசியல்   மேடைகளிலும்   அடிக்கடி
தோன்றிப் பேசி, முதல்தரமான அரசியல் வாதியாவே வாழ்ந்தார்.

காந்தி மகான் வில்லுப்பாட்டு!

     பிற்காலத்தில்    நாடகங்களிலேயும்   திரைப்படங்களிலேயும்   நடித்து
பெரும்புகழ்  பெற்ற  கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்   அவர்கள்,  தமது
இளமைப் பருவத்திலே தேசிய  நாடகங்களில்  நடித்து, நாடகத்திற்குள்ளேயே
வரும் கலை நிகழ்ச்சியாக "காந்தி மகான்  வில்லுப்பாட்டும்"   நடத்தியுள்ளார்.
அதனை, கலைஞர் தி.க.சண்முகம் சொல்லக் கேட்போம்:

     "கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்  எங்கள்  குழுவில்  இருந்த காலம்
அது. அவர் "தேச பக்தி" நாடகத்திற்கென்றே முதன் முதலாகக் "காந்தி மகான்
கதை"யை   வில்லுப்பாட்டாக  எழுதித்  தயாரித்தார்.  இந்த வில்லுப்பாட்டு,
காந்தியடிகளின்  பிறப்பு  முதல் வட்டமேஜை மாநாடு   கூட்டப்பட்டது வரை
அன்று  நடைபெற்றிருந்த  அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடங்கியதாக
அமைக்கப்பெற்றிருந்தது.

     "தேச பக்தி"  நாடகம்  அந்நாளில்   திருநெல்வேலி   சேலம்  ஆகிய
மாவட்டங்களில்  அரசினரால்  தடைசெய்யப்பட்டது. மற்றும் சில நகரங்களில்
ஒரு  சில  காட்சிகள்   மட்டும்   தடை   செய்யப்பட்டன.   ஏ.பி.நாகராசன்,
எம். ஆர். சாமிநாதன்,   புளிமூட்டை   இராமசாமி    கே. ஆர். சீதாராமன்,
எஸ்.எஸ்.இராசேந்திரன்,  டி.என்.சிவதாணு, எம்.எஸ்.திரௌபதி  ஆகியோரும்
இந்நாடகத்தில் பங்கு பெற்று நடித்திருக்கிறார்கள்."1.

      திரு. வெ. சாமிநாத  சர்மாவின்  " தேசபக்தி " யை  அடுத்தாற்போல்
அரங்கேற்றப்பட்ட மற்றொரு தேசிய நாடகம், "இன்பசாகரன்,"


1. 15-6-66ல் சென்னை வானொலியில் பேசியது. கலைவாணர்,  தாம்  வாழ்ந்த
காலம் முழுவதும்  மக்கள்  மத்தியிலேயும் "காந்தி மகான்   வில்லுப்பாட்டு"
நிகழ்ச்சியை நடத்தி வந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.