இது, சிறை சென்ற தேசபக்தர் கோவை. திரு. ஐயாமுத்து அவர்களால்
எழுதப்பட்டதாகும். இதனைக் கண்டோர் தேசாவேசம் பெறும்வகையில்
உணர்ச்சித் துடிப்புடைய நடையில் ஆசிரியர் உரையாடல்களை
எழுதியுள்ளார். நவாப். டி.எஸ். இராசமாணிக்கம் அவர்களின் "ஸ்ரீ பால
விநோத சங்கீத சபை" யார் இதனை 1939 ஆம் ஆண்டில்
பொன்னமராவதியில் அரங்கேற்றினர். இதிலே நவாப் இராசமாணிக்கம்,
நகைச்சுவை நடிகர் கே.சாரங்கபாணி, எம்.என்.கண்ணப்பா, ஏ.எம்.மருதப்பா
ஆகியோர் நடித்தனர். அடுத்து நம் நினைவுக்கு வரும் மற்றொரு தேசிய நாடகம் விடுதலைப்
போரில் கலந்து சிறை சென்ற கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்கள் எழுதிய
"கவியின் கனவு" ஆகும். இது முற்றிலும் கற்பனை நாடகம். ஆயினும் நாட்டின்
நடப்புகளையெல்லாம் மக்களுக்கு உணர்த்தும் காட்சிகளையும்
கருத்துக்களையும் கொண்டிருந்ததால், முதல் தரமான தேசிய நாடகமாக
அமைந்தது. நாடகத்தின் உரையாடல்களிலே தேசபக்த உணர்ச்சியைக் கலந்து
எழுதியுள்ளார், தீவிர தேசபக்தரான ஆசிரியர் எஸ்.டி.சுந்தரம்.
மதுரை வாசுதேவ நாயர் என்பவர், புகழ்மிக்க ஹார்மோனியக்
காரராக விளங்கினார். இவர், நாடகக் கலைஞர்களிலே வேறு எவரையும் ஈடு
இணை சொல்ல முடியாத தேசபக்தராக விளங்கினார். இவருக்கு அதிகாரிகள்
கொடுத்த தொல்லைகள் கொஞ்சமல்ல. சிறைப்பட்டு, வருவாயை இழந்து
வருந்தினார்.
நடிகைகளின் நாட்டுப் பற்று
நடிகையரிலேயும் சிலர் விடுதலைப் போரிலே ஈடுபட்டுச் சிறை
சென்றனர் .இந்தப் பெருமைக்குரிய நடிகையரைத் தோற்றுவித்த பெருமை
மதுரை மாவட்டத்திற்கே உண்டு. மதுரை திருமதி கே.பி.ஜானகியம்மாள் மிகச்
சிறந்த நடிகையும் சிறை சென்ற தேசியவாதியுமாவார். இவர், சிறந்த
பேச்சாளருமாவார். இராசத்துவேஷமான தேசியப் பாடலைப் பொதுக்
கூட்டமொன்றில் பாடியதற்காக இவர் ஒருமுறை சிறைத் தண்டனை பெற்றார்.1
1. இவர் தற்போது இடதுசாரிக் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் தமிழக
சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கின்றார்.