பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 221

     மதுரை  திருமதி. பி.எஸ்.தாணுவம்மாள், மிகச் சிறந்த நடிகை. சிறை
சென்றவர்.  தேசியப்  பாடல்களை  மிகவும்  அருமையாகப்  பாடும்  திறமை
பெற்றிருந்தார்.

     திருமதி.எம்.ஆர்.கமலவேணி, ஆர்மோனியம் வாசிப்பதிலே சிறப்புற்று விளங்கினார்.    தேசியப்பாடல்களைப்      பாடக்கூடாதென்று       அரசு
இவ்வம்மையாருக்குத்   தடைவித்தபோது,   அதனை   மீறி,   தேனினுமினிய
செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சிறைபுகுந்தார்.

     எஸ்.ஜி.கிட்டப்பா-கே.பி.சுந்தராம்பாள்   தம்பதிகள், நாடக உலகில்
புகழ் மிக்க நடிகர்களாக  விளங்கினர்  என்பது  நாடறிந்ததாகும்.  இவர்களில்
எஸ்.ஜி.கிட்டப்பா, அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆயினும் எப்போதும்
தூய கதரணிந்து, காந்திக் குல்லாயுடன் காட்சியளிப்பார்.திருமதி சுந்தராம்பாள்,
அரசியலிலும்   நேரடியாகத்    தொடர்பு    கொண்டிருந்தார்.    இருவரும்
கதாநாயகன்-கதாநாயகியாகத்   தோன்றி   நடிக்கும்  நாடகங்களிலே தேசியப்
பாடல்களைப் பாடுவர்.

      கிட்டப்பா   பாடிய   தேசியப்   பாடல்களிலே,   "வந்தே  மாதரமே,
வாழ்வுக்கோர்  ஆதாரமே"  என்ற பாடல் மிகவும் முக்கியமானதாகும். இந்தப்
பாடல் அந்நாளில் மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

மெய்யப்பரின் தொண்டு

      கோடம்பாக்கம் ஏ.வி.எம்.ஸ்டூடியோ உரிமையாளர் திரு.ஏ.வி.மெய்யப்ப
செட்டியார், வழக்கமாகக் கதரணியக்கூடியவர். தேசிய மனப்பான்மையுடையவர்.
இவர்,  அந்நாளில் நாடக மேடைகளில் பாடப்பட்ட உணர்ச்சியூட்டும் தேசியப்
பாடல்களிலே  சிறந்தவற்றைத்   தமது  " சரஸ்வதி  ஸ்டோர்ஸ் "  வாயிலாக
இசைத்தட்டுகளாக  வெளியிட்டு,   நாட்டிலே   தமிழுணர்ச்சியையும்  தேசிய
உணர்ச்சியையும் பரப்பினார்.

     ஏ.வி.எம்.அவர்கள்   பாரதியாரின்   பாடல்களைத்   திரைப்படங்களில்
பயன்படுத்துவதற்கு ஏகபோக  உரிமை பெற்றிருந்தார்.   ஆனால்,   ஓமந்தூர்
இராமசாமி ரெட்டியாரை முதலமைச்சராகக்  கொண்டிருந்த  காங்கிரஸ்  அரசு,
பாரதியார்  பாடல்களைத்  தேசவுடைமையாக்க  முன்வந்தபோது,  எத்தகைய
நஷ்ட  ஈடும்  கோராமல்,  தமது உரிமையை  மனமுவந்து  விட்டுக்கொடுத்து,
மக்களின் பாராட்டைப் பெற்றார்.  இது, தமிழ்  வளர்ச்சிக்கு  அவர்  ஆற்றிய
பெருந்தொண்டு எனலாம்.