வடபுலத்திலே... நாடகத்தின் வாயிலாக பிரதேச மொழிகளின் வளர்ச்சிக்குப்
பாடுபடுவதும் தேச விடுதலைப் போருக்கு ஆக்கந் தேடுவதுமான பணிகள்
பாரதத்திலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்றன. தீனபந்து மித்திரா
என்பார், வங்க மொழியிலே "நீல தர்ப்பணம்" (நீலக் கண்ணாடி ) என்ற
பெயரில் ஒரு நாடகம் எழுதினார். இதனால் அவுரித்தோட்டத் தொழிலில்
ஆங்கில முதலாளிகள் செய்த அட்டூழியங்களை எதிர்த்துப் போராடும்
கிளர்ச்சி மூண்டது. அதுகண்டு, ஆட்சி ஆத்திரங்கொண்டது. இதனை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ரெவரண்டு லாங் என்ற
வெள்ளைப் பாதிரியாரைச் சிறையில் தள்ளியது.
விடுதலைப் போராட்டத்தின்போது, தங்களுக்கிருந்த தேசபக்தியை
நாடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியதற்காக, பாரதம் முழுவதிலும் நடிக-
நடிகையர் பல்லோர் சிறையில் அடைக்கப் பட்டனர். ஆம்; தேசபக்தராக
நடிப்பதைக் கூட ராஜத்துரோகக் குற்றமாகக் கருதியது ஆட்சி, ஆனால்,
தேசபக்தியுடைய நடிக-நடிகையர் அஞ்சவில்லை. சிறை வாழ்க்கையிலேயும்
"சிறைச்சாலை என்ன செய்யும் ?" " சிறையில் புகுந்த மனமே " என்னும்
செந்தமிழ்ப் பாடல்களைப் பாடி இன்புற்றனர்.