திரைப்படத்திலும் தேசபக்தி சினிமா, நாடகம் என்னும் தாய்க்குப் பிறந்த சேயாகக் கருதப்படுகிறது.
காந்தி சகாப்தத்திலேதான் பேசும்படம் தோன்றியது. அதனால், தேசியவாதிகள்
திரைப்படத் துறையோடும் தொடர்பு கொண்டு, தங்கள் பிரச்சாரத்தை நடத்த
முயன்றனர். அப்பணியிலே முதல்வராக - முன்னோடியாக விளங்கிய பெருமை
டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்களுக்கே உரியதாகும். நாடக மேடையிலே,
ஆக்க வழிப்பட்ட தேசியப் பிரச்சாரமேயன்றி, அரச நிந்தனைபேசும் முதல்
தரமானஅரசியல் பிரச்சாரமும் நடைபெற்றதென்பதனை முன்பே அறிந்தோம்.
ஆனால், திரைப்படத் துறையிலே அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
பெருமளவு மூலதனம் போட்டுத் திரைப்படம் எடுக்க வேண்டியிருப்பதால்
நேரடியாக இராஜத்துவேஷப் பிரசாரத்தில் ஈடுபடுவது சாத்தியமில்லைதானே!
போட்ட மூலதனத்துக்குக் கேடுவராமல் காத்துக் கொண்டால்தானே
திரைப்படத் தொழிலில் உறுதியாக ஊன்றி நிற்க முடியும்? இந்த உண்மையை
உணர்ந்து, தேசபக்தியைப் பரப்புகின்ற அளவில் - காந்தியடிகள் போதித்த
தீண்டாமை விலக்கு, மது விலக்கு, இந்து முஸ்லிம் ஒற்றுமை, தேசிய
ஒருமைப்பாடு ஆகிய ஆக்க வழிப்பட்ட கொள்கைகளைப் பிரச்சாரம்
செய்யும் சாதனமாக திரைப்படம் பயன்படுத்தப்பட்டது.
1931ல் தான் முதன் முதலாகத் தமிழில் பேசும்படம் தயாரித்து
வெளியிடப்பட்டது. அதன் பெயர், 'காளிதாஸ்', அதன்பின், ஐந்தாண்டு காலம்
அடுத்தடுத்து புராணப் படங்களே வெளிவந்தன. ஆனால், அப்போதுதான்
புரட்சித் தன்மையை அடைந்துவந்த தேசிய எழுச்சி காரணமாக, திரைப்படத்
துறையிலும் மாறுதல் ஏற்பட்டது. 1936ல் 'மேனகா' என்னும் சமூக சீர்திருத்தப்
படம் வெளியானது. அதனையடுத்து தேசிய மணங்கமழும் சமூகப் படங்களும்
தயாரிக்கப்பட்டன.
டைரக்டர் கே. சுப்பிரமணியம்
காந்தி சகாப்தத்தில் திரைப்படத் துறையினர் பெற்ற சமூக சீர்திருத்த
உணர்ச்சியின் விளைவாக, 1938ல் 'மால பில்லா'என்ற