படம் தெலுங்கு மொழியில் வெளியானது. இதனால், தீண்டாமை விலக்கு
இயக்கம் ஆக்கம் பெற்றது. இந்தப் படம் தமிழ் நாட்டிலும் பெரிய
நகரங்களில் வெற்றிகரமாகக் காட்டப்பட்டது. டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள், கதர் அபிமானி; காந்தி பக்தர்;
அந்நாளில், தேச விடுதலையில் எல்லையற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
வைதிகக் குடியில் பிறந்தவராயினும் சமூக சீர்திருத்தக் கொள்கை கொண்டவர்.
இவர், 1937ல் 'பாலயோகினி' என்ற சமூக சீர்திருத்தப் படத்தைத்
தயாரித்து வெளியிட்டார். இதனை, அவரே டைரக்ட் செய்தார். தீண்டாதாருக்கு
ஆலயப் பிரவேசம் அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் நியாயத்தையும்
வற்புறுத்தும் பிரச்சாரப் படமாக இது அமைந்தது. இதிலே, பால சரஸ்வதி,
பேபி சரோஜா , பிரகதாம்பாள், சி.வி.வி.பந்துலு, கே. ஆர். செல்லம்,
ஆர்.பார்த்தசாரதி ஆகியோர் நடித்தனர். இப்படம் வைதிக வட்டாரத்திலே
பெருத்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
1940ல் 'பக்த சேதா' என்னும் மற்றொரு படத்தைத் தயாரித்து
வெளியிட்டார். இதன் மூலமும் ஆலயப் பிரவேசக் கொள்கைக்கு ஆக்கம்
தேடினார். இதிலே, பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.ஆர்.ஜானகி
ஆகியோர் நடித்தனர். இதனைப் பார்த்ததனால் உணர்ச்சி பெற்ற மக்கள் பல
ஊர்களில் அரிஜன மக்களை ஆலயத்துக்குள் கொண்டு செல்ல முயன்றனர்.
இதனால் உயர் சாதியினருக்கும் தாழ் சாதியினருக்கும் இடையே பூசல்
தோன்றுவதாகக் காரணம் கூறி திருநெல்வேலி-மதுரை ஆகிய நகரங்களிலே
இந்தப் படத்தைக் காட்டக் கூடாதென்று அரசாங்கம் தடைவிதித்தது.
நீதிமன்றம் ஏறி, இந்தத் தடையைத் தகர்த்து, நெல்லை - மதுரை நகரங்களி
லேயும் திரு கே. சுப்பிரமணியம் வெற்றிகரமாகத் திரையிட்டார்.
'சேவா சதனம்' என்னும் மற்றொரு திரைப்படத்தையும் திரு.கே.
சுப்பிரமணியம் சிறந்த முறையில் தயாரித்து வெளியிட்டார். இதில்
திருமதி. எம் எஸ். சுப்புலட்சுமி, திருச்சி தேசபக்தர் எப். ஜி .நடேசய்யர்,
எஸ்.வரலட்சுமி ஆகியோர் நடித்தனர். அந்நாளில் காந்தியடிகள் பெரிதும்
வற்புறுத்திய சமூக சேவை இந்தப் படத்தின் மூலமாகப் போதிக்கப் பெற்றது.