பக்கம் எண் :

226விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

அதனைத் திறம்படத் தயாரித்திருந்தார். அதனால், அரசாங்கத்தின் விஷக்கண்
பார்வை தியாக பூமிப் படத்தின்மீது விழுந்தது. சென்னை நகரில்  தொடர்ந்து
எட்டு வாரம் ஓடிய பின்னர் அரசினரின் தடை பிறந்தது! ராஜ்யம் முழுவதுமே
படத்தைக்  காட்டக்  கூடாதென்று  தடைவிதித்தது  அன்னிய  ஆட்சி. நாடு
சுதந்திரம் பெற்ற பின்னர்தான் அத்தடை நீக்கப்பட்டது.

      டைரக்டர் கே. சுப்பிரமணியம்,  தமிழ்மொழியிடத்தும் அம்மொழிவழித்
தோன்றிய   கலைகளிடத்தும்   கரைகாணாக்  காதலுடையவர்.   இவருடைய
மனைவி,  மக்கள்,  மருமக்கள்  ஆகிய அனைவருமே முத்தமிழ்ப் பணியிலே
ஈடுபட்டுள்ளனர்.   இவர்கள்   அயல்  நாடுகளுக்கெல்லாம்   சென்று  தமிழ்
மொழிக்கும் தமிழகத்துக் கலைகளுக்கும் பெரும்புகழ் சேர்த்துள்ளனர்.

     திரு. எஸ்.சௌந்தரராசன்  என்பவர்,  சிறந்த  தேசியவாதி.   சென்னை
மாவட்ட  காங்கிரஸ்  குழுவின்  அங்கத்தினராக  இருந்தவர்.  இவர்,  1934ல்
'தமிழ்நாடு  டாக்கீஸ்'  என்ற  ஒரு  நிறுவனம்  கண்டு,  அதன்  சார்பில் பல
திரைப்படங்கள் எடுத்தார். 1945ல் திரைப்படத் தூதுக்குழு  ஒன்றுடன் சேர்ந்து
பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார்.

      'தென்னிந்தியத்   திரைப்பட   வர்த்தகர்  சங்கம்'  (சௌத்  இந்தியன்
பிலிம்சேம்பர்  ஆப் காமர்ஸ்) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்த எழுவரிலே
திருவாளர்கள்     டைரக்டர்    கே.சுப்பிரமணியம்     எஸ்.சௌந்தரராசன்,
சி.எஸ்.வி.  ஐயர்  ஆகியோர்  மிகச் சிறந்த தேசியவாதிகளாவர். இதன் முதல்
தலைவர்  நாவலர்  எஸ். சத்தியமூர்த்தி  ஆவார்.  1939  முதல்  1941 வரை
ஐயரவர்களே இதன் தலைவராக இருந்து வந்தார்.

     பின்னர், திருவாளர்கள்  டைரக்டர் கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன்
ஆகிய தேசியவாதிகள் தலைவர் பதவியை அடைந்துள்ளனர்.

     தலைவர்  சத்தியமூர்த்தி  7-8-1939  பம்பாய்  நகரில்  கூடிய   அகில
இந்தியத் திரைப்பட காங்கிரசிற்குத் தலைமை தாங்கி, இந்தியாவில் திரைப்படத்
தொழில்    வளர்ச்சிக்குள்ள    தடைகளை   எடுத்துக்காட்டி,   அவற்றைப்
போக்குவதற்கான    வழிவகைகளையும்   கூறினார்.   தேசிய   எழுச்சியால்
திரைப்படத்   தொழில்   வளர்ந்துவருவதனைச்  சுட்டிக்காட்டி,  திரைப்படத்
தொழிலாலும்            சுதேசியம்        வளர    வேண்டுமென்பதனை