மேடைத் தமிழ் வளர்த்த மேதைகள் சுதந்திர இந்தியாவில் மேடைப் பேச்சாளர் தொகை பெருகிவருகின்றது.
இதனால், ஒவ்வொரு துறையிலும் பேச்சு மிகுந்து,செயல் குறைந்து வருவதாகக்
குறைகூறப்படுகின்றது. இந்தக் 'குறைபாடு' தமிழகத்திலேதான் அதிகமாகக்
காணப்படுகின்றதாம். இது பற்றி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்
சி.என்.அண்ணாத்துரை அவர்கள் தந்துள்ள ஒரு தகவலை இங்கு பார்ப்போம்:
"என்னை வடக்கேயுள்ள பாராளுமன்றக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்
கேட்டார், "ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், சலிப்பாக
இல்லையா?" என்று. நான், என்னைத்தான் கேட்கிறார் என்று நினைத்துக்
கொண்டு, 'இல்லை ஐயா' என்றேன். "உங்களுக்கல்ல ஐயா, பொதுமக்களுக்குச்
சலிப்பாக இல்லையா?" என்று கேட்டார். ஏனென்றால், வடக்கேயுள்ளவர்கள்,
அரசியலை அடிக்கடி எடுத்துப் பேசினால் சலிப்பாக இருக்கிறதென்று
கருதுகிறார்கள்."1
பாரதத்திலே அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்
கொண்டு நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி பிரச்சார பேரிகை கொட்டுகின்றன.
இது, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தோன்றி, சுதந்திரம் பெற்ற
பின்னரும் நீடித்துவரும் நிலையாகும். சுதந்திரப் போராட்ட காலத்திலே-
குறிப்பாக, காந்தி சகாப்தத்திலே பேச்சு மேடையே சுதந்திரம் பெறுவதற்கான
பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா, அயர்லாந்து போன்ற
நாடுகளிலே விடுதலைப் போர் ஆயுத பலத்தால் நடத்தப் பெற்றது. கொலை,
கொள்ளை முறைகளையும் விடுதலை வீரர்கள் கடைப்பிடித்தனர். அதனால்,
அவர்களில் பெரும்பாலோர் அரசினரின் கொடிய அடக்குமுறைக்கு
இரையாகாமல் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டி, தலைமறைவிலிருந்து
கொண்டு விடுதலைப் போரை நடத்தினர். ஆகவே, அவர்களால்
பேச்சுமேடையை அதிக அளவில் பயன்படுத்த இயலவில்லை.
இந்திய விடுதலைக்குப் போராடிய தேசியவாதிகளின் நிலைவேறு.
இங்கு முற்றிலும் சாத்விக முறைப்படிப் போராட்டம்
1. 'ம.பொ.சி.பற்றி அண்ணா'பக்.14.