எழுதி நூலாக்கப்படும் வழக்கம் அன்றுமில்லை; இன்று மில்லை; இனியும்
இல்லாமலே போய்விடுமோ என்னவோ! வ.வே.சு.ஐயரவர்கள் இந்தக் குறையை
எடுத்துக் காட்டியுள்ளார். "வாக்மிகள் இல்லாத நாடாவது யுகமாவது இராது என்று
சொல்லிவிடலாம். ஆனால், நம் நாட்டில் பெரிய வாசாலர்களின் பேச்சுக்களை
எழுதி வெளிப்படுத்தியதில்லை. முன்னாட்களில் கிரீஸிலும், ரோமிலும்,
இக்காலத்தில் ஐரோப்பாவின் இதர நாடுகளிலும் அமெரிக்காவிலும்,
வாக்மிகளின் பிரசங்கங்கள் எழுதப்பட்டு வந்திருக்கின்றன."
விடுதலைப் போர்த் தளபதிகளுடைய சிறந்த பேச்சுக்களெல்லாம் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு அச்சுப்பிரசுரங்களாகவும் நூல்களாகவும்
வரவேண்டுமென்ற விருப்பம் அந்நாளிலே மகாகவி பாரதியாருக்கும் இருந்தது.
அப்படி வருவது சுதேசிப் பிரசாரத்திற்காக மட்டுமல்லாமல், சொந்த மொழியின்
வளர்ச்சிக்காகவும் அவசியமென்று அவர் கருதினார். இதுபற்றித் தமது
பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு குறிப்பு வருமாறு:
"சமீபத்திலே, பம்பாயில் கூடிய காங்கிரஸ் சபை, முஸ்லிம் சங்கம்
முதலியவற்றில் நடந்த உபந்நியாசங்களை வாசித்துப் பார்த்தேன். பெரும்பாலும்
ரஸமாகத்தான் இருந்தது. இவை போன்ற பிரசங்கங்களையெல்லாம் தமிழில்
தெளிவாக மொழிபெயர்த்து அப்போதைக்கப்போது குட்டிப் புத்தகங்களாகப்
போட்டால் நல்லது. இந்த விஷயத்தில் ஸ்ரத்தை எடுத்தால், தமிழ் நாட்டுக்கும்
உபகாரம். அவர்களுக்கும் நல்ல லாபமேற்படும்."1
'தமிழிலே பேசு'
பேச்சு மேடையிலே ஆங்கிலமொழி பெற்றிருந்த ஆதிக்கத்தையொழித்து
அன்னை மொழிக்கு முதலிடந்தேட தமிழ்ப் பெரியார் திரு. வி .க.
அரும்பாடுபட்டார். அதற்காக, பெருங்கிளர்ச்சியே நடத்தினார்.தமிழர் மட்டுமே
அடங்கிய கூட்டத்திலே தமிழரொருவர் ஆங்கிலத்தில் பேசும் அநாகரிகத்தை
எதிர்க்குமாறும் மக்களைத் தூண்டினார். அதுபற்றித் திரு.வி.க. அவர்களே
கூறக் கேட்போம்:
"சென்னை மாகாணச் சங்க சார்பில் தஞ்சை - திருச்சி மாநாடு
(20, 21.4.1919) தஞ்சையில் கூடியது. தலைமை பூண்டவர்
1. இந்தியா, 19-1-1916