பக்கம் எண் :

232விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

'இந்தியன்   பேட்ரியட்'  ஆசிரியர்  திவான்   பகதூர்   கருணாகரமேனன்.
அம்மகாநாட்டில்  பல  தீர்மானங்கள்  நிறைவேறின.  அவைகளுன்  ஒன்று
தமிழைப் பற்றியது.  அதை யான் வழிமொழிந்து பேசுகையில்,  இனிப் பொதுக்
கூட்டங்களில்  தமிழர்கள்  தாய்மொழியிலேயே  பேசுதல்  வேண்டுமென்றும்;
அயல்  மொழியில் பேசுதல்  கூடாதென்றும்,  எவரேனும்  அயல் மொழியில்
பேசப் புகுந்தால்  அவரைத் திருத்தும்  பொறுப்பைப்  பொதுமக்கள்  ஏற்றல்
வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.  அதுபற்றித்  'தேசபக்தன்'  வாயிலாகவும்
கிளர்ச்சி  செய்தேன்.  என்  பேச்சும்  எழுத்தும் தக்க பயனை விளைவித்தன.
'தமிழில்   பேசலாகாது'  என்று  ஆங்கிலத்தில   நாவன்மை  காட்டி   வந்த
பெருந்தலைவர்களெல்லாரும்  தமிழில்  பேசப்   புகுந்தனர்.    பொதுமக்கள்
கிளர்ச்சியின் முன்னர் எந்தத் தலைவர் என்ன செய்தல் கூடும்? என் வாழ்வில் நிகழ்ந்த முதல் புரட்சி இஃது ஆகும்."1

     திரு.வி.க.குறிப்பிடும் 'சென்னை மாகாணச் சங்கம்'  என்பது,  அந்நாளில்
காங்கிரசுக்கு எதிராக மிகுந்த வலிவோடும் பொலிவோடும்  இயங்கிய ஜஸ்டிஸ்
கட்சியை எதிர்த்துப் போராடும் பொருட்டு,  பிராமணரல்லாத  தேசியவாதிகள்
தோற்றுவித்ததாகும். அச்சங்கத்தில் தமிழரேயன்றி, ஆந்திரர்-கேரளர்-கன்னடர்
ஆகியோரும் இருந்தனர். அப்படி இருந்தும்,  அச்சங்கத்தின் பெயரால் தமிழ்
நாட்டில்  நடத்தப்படும்   கூட்டங்களிலும்   மாநாடுகளிலும்   தமிழரானோர்
தமிழிலேயே  பேச  வேண்டுமென்றும் திரு.வி.க.கோரினாரென்றால், அதையும்
மலையாளியொருவர்  தலைமை  வகித்த  மாநாட்டிலே  தீர்மான    வடிவில்
நிறைவேற்றி வைத்தாரென்றால், அந்நாளில் திரு.வி.க. வுக்கிருந்த  தமிழுணர்ச்
சியைப் புகழ்ந்துரைக்க வார்த்தை ஏது?

     நாவலர்  சத்தியமூர்த்தி   உலகப்  புகழ்பெற்ற  ஆங்கிலப்  பேச்சாளர்
களிலே ஒருவராக விளங்கினார். அவருக்கு ஆங்கிலத்திடம்  மோகம்  உண்டு.
ஆயினும்,    ஆங்கிலம்   அறியாத    மக்கள்   பெரும்பாலோராக  உள்ள
பொதுக்கூட்டங்களிலே ஐயர் தமிழில் தான் பேசுவார். அவர் முதல் முதலாகத்
தமிழில்   சொற்பொழிவாற்றியது    மதுராந்தகத்தில்     நடந்த   கூட்டுறவு
மாநாட்டிலாகும். அதில், சி.சங்கரன் நாயர் தலைமைவகித்தார்.


1. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்;பக்.216-62.