பண்டிதை அசலாம்பிகையார் திருக்கோயிலூர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார், மேடைத்தமிழ்
வளர்த்த பெருமாட்டிகளில் முதல்வராவார். அவ்வம்மையார், புராண-
இலக்கியக் கூட்டங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் திறம்படப் பேசும்
நாவன்மை பெற்றிருந்தார். அம்மையாரின் பேச்சுத் திறன்பற்றி
திரு.வி.க.தந்துள்ள புகழுரையைப் பார்ப்போம்:
"சென்னையிலே பாண்டித்துரை, நல்லசாமிப் பிள்ளை,
ஜஸ்டிஸ் சதாவசிவ ஐயர் முதலியோர் தலைமையில் அசலாம்பிகை
அம்மையாரின் சொற்பொழிவுகள் நிகழும். அவைகளைக் கேட்கப்
பெருங்கூட்டம் கூடும். முதியரும் மொய்ப்பர்; இளைஞரும் ஈண்டுவர்.
பின்னவருள் யானும் ஒருவன். பண்டிதையார் பேச்சிலே கம்பனும்
சேக்கிழாரும் காட்சியளிப்பர். அம்மையாரின் சொல் திறம், யான் வீடு
சேர்ந்ததும், அவர் எடுத்துக்காட்டிய பாட்டுக்களை ஒருமுறை ஊன்றி நோக்க என்னை ஏவும்."
"1921ம் ஆண்டிலே தென்னார்க்காடு ஜில்லா அரசியல் மாநாடு
கூடலூரிலே என் தலைமையில் கூடியது. அம்மாநாட்டில் பண்டிதை
அசலாம்பிகை அம்மையாரும் கலந்துகொண்டார். அங்கேயே அம்மையாரின்
தமிழ், அவரையும் என்னையும் தாயுஞ் சேயும் ஆக்கிற்று."1
மேடைத் தமிழ் வளர்த்த பேச்சாளர்களிலே கம்யூனிஸ்டுத் தலைவர்
தோழர் ப. ஜீவானந்தம் ஒருவராவார். அவர், நாட்டின் விடுதலையிலே
‘தமிழின் விடுதலையையும், உழவர் - தொழிலாளர் விடுதலையையும் காண
விழைந்தார். அவர் பேச்சுக்களெல்லாம் திரட்டப் பெற்று நூல்வடிவம்
பெற்றிருந்தால், அது புரட்சி மணங்கமழும் ஒரு புது இலக்கியமாக
அமைந்திருக்கும். தமிழ்ப் பற்றும் 'தமிழர்' என்ற இனப்பற்றும் அவருடன்
கூடப் பிறந்தவை எனலாம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், விடுதலைப் போராட்டங்களிலே
கலந்துகொண்டு சிறைசென்ற தேசபக்தராவார். அன்னார், வீறுமிக்க தமிழில்
பேசிப் பாமரர்களுக்கு அரசியல் விழிப் பூட்டினார்.
1.திரு.வி.க.வாழ்க்கைப்குறிப்புகள்;பக்.216-62.