பக்கம் எண் :

234விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

சமய - இலக்கிய  ஞானம் பெற்றிருந்த  காரணத்தால் அவரது பேச்சு தமிழின்
பெருமையை  உணர்த்தவல்லதாக  இருந்தது. தேவர் மாதிரி  பேசத் தேவரால்
தான் முடியும்.

      டாக்டர்.  தெ.பொ .மீனாட்சிசுந்தரனார்,  திரு.த. செங்கல்வராயன்,பி.ஏ.,
எல்.எல்.பி., திரு.கிருஷ்ணசாமி   பாரதி,  பி.ஏ.,பி.எல்.,   பல்கலைக்   கழகப்
பட்டமேதும்  பெறாத  சிதம்பரம்  என்.  தண்டபாணிப் பிள்ளை, 'தென்னாடு'
ஆசிரியர்    டி.என்.நடராசப்    பிள்ளை,    நெல்லை    ந.சோமயாஜு லு,
திருவண்ணாமலை  என். அண்ணாமலைப்பிள்ளை,   வேலூர்   அ.குப்புசாமி
முதலியார்,    கோவை   சி.பி.சுப்பையா,   மதுரை   சுந்தரவரதன்,  சேலம்
அ.சுப்பிரமணியம்,  வேலூர்  ஜனாப்  உபயதுல்லா,  ஜமதக்னி  முதலிய பலர்
பேச்சு   மேடையைப்   பாமர   மக்கள்   அரசியல்   பயிலும்  பல்கலைக்
கழகமாக்கினர்.

      காங்கிரஸ்  மாநிலங்கள்  மொழி  அடிப்படையில்   திருத்தியமைக்கப்
பட்டதன் விளைவாக,மாநிலக் கமிட்டிகளின் நிர்வாகமும் பிரச்சாரமும் பிரதேச
மொழியில்  நடைபெற்றாலும்,  அகில   இந்திய   காங்கிரஸ்   மகாசபையின்
மேடையிலே  பெரும்பாலும்  ஆங்கிலமே ஆதிக்கம் பெற்றிருந்தது. ஆங்கில
ஆதிக்கத்தை  அழிப்பதிலும்  பிரதேச மொழிகளை வளர்ப்பதிலும் பேரார்வம்
காட்டிய காந்தியடிகள்கூட, பெல்காம் நகரில் நடைபெற்ற 39ஆவது காங்கிரஸ்
மகாசபையில்  தமது  தலைமையுரையை   ஆங்கிலத்தில்தான்  நிகழ்த்தினார்.
காரணம்  தேசம்  முழுவதிலும் வழங்கக்கூடிய ஒரு பொது மொழி இல்லாதது
தான்.

     1919ஆம்  ஆண்டில்  அமிர்தசரஸ் (பஞ்சாப்) நகரில் கூடிய 34ஆவது
மகாசபையிலே  வரவேற்புத்  தலைவர்  சுவாமி  சிரத்தானந்தர்  தமது  தாய்
மொழியான பஞ்சாபியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

     1921ஆம்  ஆண்டில்  ஆமதாபாத்தில் ( தற்போது குஜராத் மாநிலத்தின்
தலைநகர்)  கூடிய  36ஆவது  காங்கிரஸ்  மகாசபையின்  வரவேற்புக் குழுத்
தலைவர்    சர்தார்   வல்லபபாய்பட்டேல்   பொதுமொழியான    இந்தியில்
வரவேற்புரை நிகழ்த்தினார்.

     திரு.கு. காமராசர், இருமுறை காங்கிரஸ் மகாசபைத்  தலைமையுரையைத்
தமது  தாய்மொழியான  தமிழிலே நிகழ்த்தினார். இது  வரலாற்றுச்சிறப்புமிக்க
நிகழ்ச்சியாகும்.