அச்சடித்துத் தர அச்சகம் எதுவும் துணியாது. அதனால் பேச்சாளரே தம்
கழுத்தில் தமுக்கைக் கட்டிக்கொண்டு, தெருத் தெருவாகச் சென்று
தமுக்கடித்து, கூட்டம் நடத்தப்படும் இடத்தையும் நேரத்தையும் அறிவிப்பார். இவ்வாறு தாம் பேசும் கூட்டத்திற்குத் தாமே தமுக்கடித்து அறிவித்த
பேச்சாளர்களிலே சிதம்பரம் நயினியப்பர், வேலூர் வி.கே.குப்புசாமி ஆகியோர்
முக்கியமானவர்களாவர்.
இப்படி, சொல்லொணாத் துன்பங்களை யெல்லாம் பரிசுகளாகப் பெற்று
மேடைத் தமிழ் வளர்த்தனர் அந்நாளைய தேசியவாதிகள்.
விடுதலை வீரர்களில் பெருந்தலைவர்களானோர் நீதிமன்றங்களையும்
பிரச்சார மேடைகளாகப் பயன்படுத்தினர். நீதிமன்றங்களிலே தங்கள் மீது
சாட்டப்பெற்ற குற்றங்களை ஏற்றும், சில சமயங்களில் மறுத்தும் அவர்கள்
கொடுத்த வாக்குமூலங்கள் இலக்கியச் சிறப்புடையவையாகும். ஆனால்,
அவையெல்லாமே ஆங்கில மயந்தான்!
இந்திய விடுதலைப் போராட்டம் சத்தியாக்கிரக முறையில் ஒளிவு
மறைவுகளுக்கு இடமின்றி நடைபெற்றதால், நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக
நிற்கும் பேறு பெற்றவர்கள் தங்கள் குற்றங்களை மறுத்து எதிர்வழக்காடித்
தப்பித்துக்கொள்ள முயலவில்லை. முயலக் கூடாதென்பதும் காந்தியடிகளின்
கட்டளை. பொய்க்குற்றம் சாட்டப்பட்ட நேரங்களில் தவிர, மற்ற நேரங்களில்
குற்றத்தை ஒப்புக்கொண்டு, அக்குற்றம் செய்ததற்கான காரணத்தை விளக்கி
வாக்குமூலம் தருவது வழக்கம். இதற்கு மிகுந்த துணிச்சலும் தியாக உணர்வும்
தேவைப்பட்டன. இந்த உயர் பண்புகள் அந்நாளைய தேசபக்தர்களுக்கு
இயற்கையாகவே இருந்தன.
காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகிய பெருந் தலைவர்கள்
நீதிமன்றங்களில் தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு மூலங்களில்
சில அவர்களுடைய வரலாற்று நூல்களிலே இடம் பெற்றுள்ளன.
ஆனால், வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விநாயக தாமோதர
சவர்க்கார், பாய் பரமானந்தர், மற்றும் பல புரட்சி வீரர்கள் மீது
வழக்கு நடைபெற்றபோது நீதிமன்றங்களிலே அவர்கள் கொடுத்த
வாக்கு மூலங்கள் தொகுக்கப்பட்டு, அவை பிரதேச மொழிகளிளெல்லாம்