பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 239

மொழி  பெயர்க்கப்பட்டு  நூல்வடிவம்  பெறவேண்டும். பெற்றால், அந்நூல்,
'சத்திய  சாஸனம்'  என்ற  சிறப்புக்குரியதாக விளங்கும். சர்.கர்ஜான் வில்லி
என்பவரைக்  கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மதன்லால் திங்கரா என்ற
இந்திய  இளைஞர்மீது இங்கிலாந்தில் வழக்கு நடைபெற்றது. அவ்வீரருக்குத்
தூக்குத்  தண்டனை  விதிக்கப்பெற்றது.  அந்த வழக்கில் இந்திய விடுதலை
வீரர்களின்  உணர்ச்சித்   துடிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் திங்கரா ஒரு
வாக்குமூலம்  கொடுத்தார்.  அப்போது  பிரிட்டனில்  அமைச்சராக இருந்த
வின்ஸ்டன்  சர்ச்சில்  அவர்கள் "தேசாபிமானத்தின் பெயரால் இதுவரையில்
செய்யப்பட்டிருக்கும் சொற்பொழிவுகளிலெல்லாம் இது மிகச் சிறந்தது" என்று
கூறினார்.

"தேசபக்தி பேசுகிறது!"

      ஓல்டுபெய்லி   நீதிமன்றத்தில்  தம்மீது  சுமத்தப்  பெற்ற  கொலைக்
குற்றத்தை  ஒப்புக்கொண்டு மதன்லால் திங்கரா கொடுத்த வாக்கு மூலத்தின்
ஒரு பகுதி வருமாறு:

     "தேசாபிமானம்மிக்க  இந்திய  இளைஞர்களை, தூக்கிலிடப்படும், நாடு
கடத்தப்படும்  மிருகத்தனமான செய்கைக்கு வஞ்சந்தீர்த்துக் கொள்வதற்காக
ஆங்கிலேயர்  இரத்தத்தைச்  சிந்த  அன்று  முயன்றேன் என்பதை ஒப்புக்
கொள்ளுகின்றேன்.  இம்முயற்சியில்  நான்  எனது  மனச்சாட்சியைத் தவிர
வேறு  யாரையும்  கலந்து  ஆலோசிக்கவில்லை.  என்  கடமையைத் தவிர
வேறு   யாருடனும்   சேர்ந்து   நான்   சதியாலோசனை செய்யவுமில்லை.
அன்னியரின்  துப்பாக்கி  முனை  கொண்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஒரு   நாட்டு  மக்கள்,   நிராயுதபாணிகளான   ஓர்   இனத்தினருக்காகப்
போராடுவது  அடிக்கடி  மறுக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  நிரந்தரமான
போர் நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்."

      "இந்து  என்ற  முறையில்,  நாட்டுக்கு  இழைக்கப்படும்  தீமையைக்
கடவுளுக்குச்  செய்யப்படும்  அவமதிப்பாக நான் கருதினேன். அவனுடைய
(தாய் நாட்டினுடைய) லட்சியம் ஸ்ரீராமரின் லட்சியம்; அவளுக்குச் செய்யும்
சேவை  ஸ்ரீகிருஷ்ணனுக்குச்  செய்யும்  சேவை.  செல்வத்திலும் அறிவிலும்
ஏழையான  என்னைப்போன்ற  ஒரு  மகன்,  தன்  தாய்க்கு  அர்ப்பணம்