பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 241

     "நீதிமன்றத்தில்   அவர்  வெளிப்படையாகவும்  அஞ்சாநெஞ்சுடனும்
விடுத்த   அறிக்கை,   அவர்   எதையும்   மறைக்கவில்லை   என்பதைக்
காட்டுகிறது.  அவர்  ஒப்புக்  கொண்டுள்ள விஷயங்கள் அவருக்கே தீங்கு
விளைவிப்பவையாக இருக்கின்றன. அவர் எந்த வித அறிக்கையும் விடுக்கக்
கடமைப்  பட்டிருக்கவில்லை.  அப்படியிருந்தும்,  அவர்,   அறிக்கைவிடத்
தவறவில்லை.  அறிக்கையின்  விளைவாகத்  தண்டனை கிடைக்கும் என்று
தெரிந்துங்கூட, அவர் எதையும் மறைக்கவேண்டுமென்று எண்ணவில்லை."

      "கௌரவமான  அந்த  மனிதரை  சாதாரணக் கைதிகள் கூட்டத்தில்
சேர்த்து வைப்பதோ, அந்தமானுக்கு அனுப்புவதோ கொடுமையாகும்.”1

      தமிழகத்திலே   மேடைத்  தமிழ்  வளர்த்த  தேசியவாதிகள்  தமிழ்
மொழிக்குப்   புத்துயிரும்  புது  ஒளியும்  தந்தனர்  என்பதனைத்  தமிழ்ப்
பற்றுடையோர் மறத்தலாகாது.

     இதுகாறும்   கூறியவற்றைத்  தொகுத்துப்  பார்த்தால்,  பேச்சுக்கலை
வளர்க்க  அந்நாளில்   தேசியவாதிகள்   ஆற்றியுள்ள   அரும்பணிகளும்
அடைந்துள்ள   இன்னல்களும்   தமிழர்  சமுதாயம் வழிவழி போற்றிவரத்
தக்கவை என்பது புலனாகும்.


1. காந்தி நூல்கள் தொகுப்பு 8; பக்.245