லிமிடெட் குழுவில் அங்கம் பெற்றிருந்தனர். பரலி.சு. நெல்லையப்பர், வெ. சாமிநாத சர்மா ஆகியோர் 'தேசபக்தனில் துணையாசிரியர்களாக இருந்து தொண்டு புரிந்தனர். திரு.வி.க. இரண்டரை ஆண்டுகாலம் 'தேசபக்தன்’ ஆசிரியராக இருந்து பணிபுரிந்த பின்னர், நிர்வாகிகளுடன் சிறிதளவு கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், ஆசிரியப் பொறுப்பினின்று விலகிக் கொண்டார். பின்னர், தமது சொந்தப் பொறுப்பில் 22-10-1920ல் 'நவசக்தி' வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். அதனோடு, 'நவசக்தி' வாரம் மும்முறையையும் 20-10-23ல் தொடங்கி நடத்தினார். இதன் ஆரம்ப நிதிக்காக, ஈ.வே.இராமசாமி ரூபாய் 1500 கொடுத்து உதவினார். ஒரே காலத்தில் இரண்டு இதழ்களை நடத்துவதில் உள்ள தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல் 31-5-1924ல் 'நவசக்தி' வாரம் மும்முறையை நிறுத்தி விட்டு வார இதழை மட்டும் சில ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி பின்னர் அதையும் நிறுத்தி, பத்திரிகை உலகிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார். தாம் பெற்று வளர்த்த 'தேசபக்தன்', 'நவசக்தி' ஆகிய ஏடுகளிடையே நிலவிய ஒற்றுமை வேற்றுமைபற்றி திரு.வி.க. வரைந்துள்ள சித்திரம் வருமாறு: "தேசபக்தன்" மகன்; 'நவசக்தி' மகள். 'தேசபக்தன்' லிமிடெட்டுள் புகுந்தவன்; 'நவசக்தி' அதில் புகாதவள். 'தேச பக்த'னில் பெரிதும் அழிவு வேலை நடந்தது. 'நவசக்தி'யில் பெரிதும் ஆக்கவேலை நடந்தது. ஆவேசமும் பரபரப்பும் 'தேச பக்த'னில் அலைந்தன; அன்பும் அமைதியும் 'நவசக்தி'யில் தவழ்ந்தன. 'தேசபக்தன்' அதிதேவதை ருத்ரன்-எழுதுகோல் பாசுபதம்; 'நவசக்தி'யின் அதிதேவதை சிவம்-எழுதுகோல் குழல். 'தேசபக்தன்' நடையில் காளி; 'நவசக்தி' நடையில் உமை. "தேசபக்தனைப் போலவே 'நவசக்தி'யும் தமிழ் உலகில் செல்வாக்குப் பெற்றாள். 'நவசக்தி' அரசியலுடன் வேறு பல துறைகளிலும் இறங்கிப் பணி செய்தமையால், அரசியலில் மாறுபட்ட கருத்துடைய யாரையும் அவள் வசப்படுத்தினாள். 'நவசக்தி'யின் தமிழ் நடம் வெளிநாடுகளிலும் புகுந்தது. இலங்கை, பர்மா, சையாம், மலேயா, மொரிஷியஸ், நெட்டால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளிலும் 'நவ |