பக்கம் எண் :

246விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

முன்னது,  ஆங்கிலங்  கலந்த  மணிப்பிரவாள  நடையைக் கடைப்பிடித்தது.
பின்னது, நல்ல தமிழ் மொழியில் வெளிவந்தது.

      'சுதேசமித்திரன்' தமிழ் நடைபற்றி 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி தந்துள்ள
எடுத்துக்காட்டு வருமாறு:

     "பெங்கால்   புரொவின்ஷியல்  கான்பரன்ஸில்  மிஸ்டர் அம்பிகாசரண்
மஜும்தாரின்  பிரஸிடென்ஷியல் அட்ரஸில்   இந்தியப் பிரஜைகளின் தேசிய
அபிலாஷைகளை   அடக்க  இந்திய புயராக்ஸி கையாண்டு வரும் ரிடரஷன்
முறைகளின்   உபயோகமற்ற    தன்மையைப்   பற்றி   கரதலாமகைமாய்க்
கூறியிருப்பது  ஹிஸ்  எக்ஸெலென்ஸி வைஸ்ராய் அவர்களின் கவனத்திற்குக்
கொண்டு வரப்படுமென்று நம்புகிறோம்."1

'அது ஒரு காலம்'

      அந்நாளில்,  நாளிதழ்களில்  வரும்  செய்திகளுக்கான தலைப்புக்கள்
ஆங்கிலத்தில்  பொறிக்கப்படும்.  அதன் கீழ்  தமிழிலும் மொழி பெயர்த்துப்
போடப்படும். ஆம், ஒரு  செய்திக்கான தலைப்பு இரு மொழிகளில்தரப்படும்.
இந்த   இரு   மொழித்  தொல்லையை  சுப்பிரமணிய பாரதியார்  போன்ற
நெஞ்சுரமிக்க தேசபக்தர்கள் வெறுத்துக் கூறியுள்ளனர்.

      "..மேலும்,  அதே  பத்திரிகையில்  ஒவ்வொரு  வியாசத்துக்கும் தமிழ்
மகுடத்துக்கு   மேலே    இங்கிலீஷ்     மகுடமொன்று   சூட்டியிருக்கிறது.
"ருஷியாவின்   நிலைமை"  "The Situation in Russia" "தாய்ப் பாஷையின்
மூலமாக  கல்வி பயிற்றல்"  "The Vernaculars as Media of  Instruction"
"ஆஹா!   நான்   மாற்றியெழுதுகிறேன்   தமிழை    முதலாவது  போட்டு,
இங்கிலீஷை  பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகையில் அப்படி  இல்லை.
இங்கிலீஷை   முன்னே   போட்டு   தமிழைக்    கீழே  போட்டிருக்கிறது.“
அமெரிக்கஸ்திரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என்  கை முதலாவது
தமிழ்  வார்த்தை  எழுதுகிறது.  “American Woman”  "அமெரிக்கா ஸ்திரீ".
"Our Mathadhipaties"  “நமது  மடாதிபதிகள்"   என்று   எழுதியிருக்கிறது
காயித பஞ்சமான காலம். என்ன அநாவசியம் பார்த்தீர்களா?"1


1. பாரதி நூல்கள் - கட்டுரைகள், 'தமிழ் நாட்டின் விழிப்பு' என்ற பகுதியில்