திரு.வி.க.வின் 'தேசபக்தன்' தோன்றிய பிறகே இருமொழித் தொல்லை தொலைந்தது. தமிழில் மட்டுமே தலைப்புப் போடும் தன்மானச் செயல் பிறந்தது. பண்டித நடையில் பேசவும் எழுதவும் பழகிய ஒருவர், பெரும்பாலும் பாமரர்களையே நம்பி வெளிவரும் செய்தி இதழின் ஆசிரியராக இருப்பது எளிதன்று. அன்றுமட்டுமல்ல, இன்றுங்கூடத்தான். ஆனால், திரு.வி.க. துறையறிந்து திறனை வளர்த்துக் கொண்டு தொண்டாற்றும் இயல்புடையவர். அதனால், தாம் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது எழுதிய பண்டித நடையைத் திருத்திக்கொண்டு, செய்தி இதழுக்குத் தேவைப்படும் எளிய நடையைக் கடைப்பிடித்தார். இதனை அவரே கூறக் கேட்போம்: "யான் தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன்; இப்பொழுது தமிழ்ப் பத்திரிகாசிரியனானேன். 'தேசபக்த'னுக்கென்று ஒரு தனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துக்கள் விளங்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண் பட்டமையால் அதுவே எனக்குரிய இயற்கையாகியது. பழைய தொடர் மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம் நேர்ந்துழிச் சில வேளைகளில் அவை தலைகாட்டும். "இலக்கணம் தமிழ்ப் போதகாசிரியனிடம் கொஞ்சிக்குலாவும். தினப் பதிப்புப் பத்திரிகாசிரியனிடம் அது கொஞ்சிக் குலாவுவதற்கு இடம் பெறுமோ? இவன் விமானத்தில் பறப்பவனல்லவோ? "என்நடை எங்கெங்கேயோ ஓடும்; திரியும்;அலையும்; பொருளுக்கேற்ற கோலம் தாங்கும்; இடத்திற்கேற்ற நடம்புரியும்."1 'தேசபக்தனில் திரு.வி.க. கையாண்ட நடுத்தரமான தமிழ் நடையை மற்ற பத்திரிகைக்காரர்களும் பின்பற்றத் தொடங்கினர். அதனால், ஆங்கிலம் பாதியும் தமிழ் பாதியும் கலந்த மணிப்பிரவாள நடைகொஞ்சங் கொஞ்சமாக பத்திரிகை உலகிலிருந்து மறையலானது. இதுபற்றி, திரு.வி.க.தரும் தகவல் வருமாறு;
1. திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்; பக்.267. |