"அந்நாளில் நாட்டு மொழிப் பத்திரிகைகளில் அயல்மொழி நாற்றம் வீசும். அரசியல் குறியீடுகள் அந்நியத்தில் அப்படியே பொறிக்கப்படும். 'தேசபக்தன்' பத்திரிகையுலகில் புரட்சி செய்தான். எப்படிச் செய்தான்? படிப்படியே செய்தான். புரட்சி நிகழ்ந்ததென்று பத்திரிகை உலகுக்கே தெரியாது. புரட்சிகளைத் 'தேசபக்த'னில் காணலாம். 'தேசபக்தன்' தமிழாக்கிய அரசியல் சொற்களும், சொற்றொடர்களும், குறியீடுகளும் இப்பொழுது பத்திரிகைகளிலும், மேடைகளிலும், பிற துறைகளிலும் ஏற்றமுற்று அரசு புரிதல் வெள்ளிடைமலை"1 சிவா பட்ட பாடு! பத்திரிகை உலகில் தமிழ் மணம் பரப்பிய தேசபக்தர்களிலே தியாகி சுப்பிரமணிய சிவாவும் ஒருவராவார். அம்மாவீரர் 1913 ஆம் ஆண்டில் 'ஞானபாநு' என்னும் பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். மூன்றாண்டு காலம் நடத்திய பின்னர், அரசினரின் தடை காரணமாக நிறுத்தினார். பின்னர், ‘பிரபஞ்ச மித்திரன்' என்ற வாரப் பதிப்பினைத் தொடங்கினார். சில இதழ்களையே வெளியிட்ட பின்னர் டாக்டர் வி.வரதராசுலுநாயுடு அவர்களுக்கு அதனைக்கொடுத்து விட்டார். திரும்பவும் 1919ஆம் ஆண்டில் 'இந்திய தேசாந்திரி' என்னும் வார இதழைத் தொடங்கி நடத்தினார். ஆட்சி கொடுத்த தொல்லை காரணமாக சொற்ப காலத்திலேயே அதையும் நிறுத்திவிட்டார். தமது பத்திரிகையின் குறிக்கோள் இன்னதென்பதனை வெளியிடுகையில் சிவா கீழ்வருமாறு எழுதினார்: "உறங்கிக் கிடக்கும் தமிழ் ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலையிற் கொண்டுவர வேண்டுமென்பதே இப்பத்திரிகையின் நோக்கம்." விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழுந்த ஆரம்ப கட்டத்திலே பத்திரிகைத் தொழில் போதிய வருவாயைத் தருவதாக இருக்கவில்லை. கைப்பொருளை இழந்து இன்னலுறுவதாகவே இருந்தது. 'ராஜத்துவேஷி' என்ற முத்திரை பொறித்துக் கொண்டு விட்ட தியாகி 1. திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்: பக். 268. |