சிவாவின் பத்திரிகையை அச்சடித்துக் கொடுக்க எந்த அச்சுக்கூடமும் முன் வரவில்லை. பொருளுதவி புரியவும் செல்வந்தர்கள் அஞ்சினர்.இந்தச் சூழ்நிலையில் பெயரை மாற்றி மாற்றித் தொடர்ந்து பல பத்திரிகைகளை நடத்தி, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் நாட்டின் விடுதலை க்கும் பணிபுரிந்தார். சிவாவின் துணிவைப் பாராட்டாதாரில்லை. 'புரட்சி வீரர்', 'மகரிஷி' என்றெல்லாம் புகழப்பெற்ற சேரமாதேவி குருகுல ஆசிரியர் வ.வே.சு.ஐயர் அவர்களும் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஈடுபட்டுத் தொண்டாற்றியுள்ளார். 'தேச பக்தன்' ஆசிரிய பீடத்தை விட்டு திரு.வி.க. அகன்ற பின்னர், அந்த இடத்தில் வ.வே.சு.ஐயர் அமர்ந்து பணியாற்றினார். ஐயர், இங்கிலாந்தில் படித்து 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றவர். ஐந்தாறு மொழிகளிலே நிறைந்த புலமை பெற்றவர். நூறு ரூபாய் சம்பளத்திற்கு 'தேசபக்தன்' ஆசிரியராகப் பணிபுரிந்தார். அந்நாளில் தொண்டுணர்ச்சி உடையவர்களே தமிழ்ப்பத்திரிகை உலகில் தொழில் புரிந்தனர். அவர்கள் செய்த தியாகத்தினால்தான் தமிழ்ப்பத்திரிகைத் தொழில் செழிப்புற்று இன்று பெரு முதலாளிகள் மூலதனம் போடத் துணியுமளவுக்கு வளர்ச்சியுற்றிருக்கின்றது. ஐயரவர்கள், 'தேசபக்த'னில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தாம் எதிர்பாராத வகையில் தமக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையால் மனமுடைந்து ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். விலகிய பின்னர், 'பால பாரதி' என்னும் பெயரில் இலக்கிய மாத இதழொன்றை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரமாதேவியிலிருந்து வெளியிடலானார். ஓராண்டு காலமே ஐயர் அப்பத்திரிகையை நடத்தினார். அதற்குள் அவரது வாழ்வு முடிந்துவிட்டது. 'பால பாரதி'யின் கொள்கை விளம்பரத்தில் ஐயர் கீழ்வருமாறு கூறியுள்ளார். "கீதை, உபநிடதம், கொரான், விவில் முதலிய வேதசாரங்களும்; தீர்க்க தரிசிகள், பெரிய கவிகள், வீரர்கள் அறிவாளிகளின் சரித்திரங்களும், கொள்கைகளும் கல்வி முறைகளும்; இயற்கை வைத்தியம், தமிழ் ஆராய்ச்சி, சமூக சீர்திருத்த விஷயங்கள், கலை விளக்கங்கள் முதலியவற்றையும்; இன்னும் பல அறிதற்கரிய விஷயங்களையும் அடக்கிப் பொலிந்து சிறந்த எழிலுடன் விளங்கும். |