தேசிய எழுச்சி! 1792 முதல் 1801 வரை சரியாகப் பத்தாண்டு காலம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பாண்டி நாட்டில் நடைபெற்ற "பாளையக்காரர்கள் போர்" தோல்வியுற்ற பின்னர், 1806ல் மற்றொரு "கோட்டைப் போர்" தமிழகத்தில் நடைபெற்றது. நடந்த இடம், வேலூர்க்கோட்டை! நடத்தியவர்கள், நாட்டுப் பற்றுள்ள சிப்பாய்கள்! நடந்த நாள், சூலை 10 ஆம் தேதி! இதுவும் பாளையக்காரர் போரைப் போல் தோல்வியே கண்டது . இதனை, "வேலூர் சிப்பாய்ப் புரட்சி" என்றழைக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். வீர சாவர்க்கர், தாம் எழுதி வெளியிட்டுள்ள 'எரிமலை' என்ற நூலில், வேலூர் புரட்சிபற்றித் தெரிவித்துள்ள கருத்து வருமாறு: "1806 ஆம் ஆண்டில் மூண்ட வேலூர் சிப்பாய்களின் புரட்சி, விடுதலை வேட்கையையே குறிக்கோளாகக் கொண்டதாகும். பின்னர்,ஏற்பட்ட முதலாவது விடுதலைப் போருக்கு அது ஒத்திகை போலும்."ஆம் , 1857ல் வடபாரதத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கு ஒத்திகையாக வேலூர் சிப்பாய்ப் புரட்சியைக் கருதுகின்றார் வீர சாவர்க்கர்.இந்தப் புரட்சியையொட்டி தமிழில் கவிதை இலக்கியமோ, உரைநடை இலக்கியமோ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தோன்றியதாகத் தெரியவில்லை. 1806ல் வேலூர்ப் புரட்சி தோல்வியில் முடிந்த பின்னர், 1906 ஆம் ஆண்டுவரை - அதாவது, தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கிளர்ச்சியைத் துவக்கும் வரை - சரியாக ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தில் அமைதி நிலவியது. ஆம்; "சுடுகாட்டு அமைதி!" அந்த இடைக்காலத்தில், மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ விடுதலைப் புரட்சிக்கான முயற்சி எதிலும் யாரும் ஈடுபட்டதாகத் தெரிய வில்லை. பாளையக்காரர் போரின்போது தமிழினம் பட்டவிழுப்புண் ஆற ஒரு நூற்றாண்டுகால ஓய்வு தேவைப்பட்டது போலும்! ஆனால், ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல் தென் பாரதத்திலிருந்து நகர்ந்து சென்று 1857ல் முன்னிலும் வேகமாகவும் விரிவான நிலப்பரப்பிலும் வடபாரதத்தில் வீசியது. |